Published : 20 Nov 2023 11:35 PM
Last Updated : 20 Nov 2023 11:35 PM
சான்பிரான்சிஸ்கோ: ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவி வகித்து வந்தவர் சாம் ஆல்ட்மேன். அண்மையில் அவரை பணியில் இருந்து நீக்கியது அந்நிறுவனம். இந்த சூழலில் ஓபன் ஏஐ நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை குறிப்பிட்டு நிறுவனத்தின் மேலிட குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அது ஏற்கப்படாத பட்சத்தில் பணியில் இருந்து விலக உள்ள உள்ளதாகவும் அச்சுறுத்தி உள்ளனர்.
ஓபன் ஏஐ இயக்குநர் குழு மாற்றப்பட வேண்டும் என தங்களது கடிதத்தில் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதில் நிறுவனத்தின் மூத்த ஊழியர்களும் அடங்குவார்கள். இந்த கடிதத்தில் மொத்தம் உள்ள 770 ஓபன் ஏஐ ஊழியர்களில் சுமார் 500 பேர் கையெழுத்திட்டுள்ளனர். தங்களது கோரிக்கை ஏற்கப்படாமல் போனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும். அதில் சாம் ஆல்ட்மேன் பணியாற்ற உள்ள ஏஐ பிரிவில் தாங்கள் பணியாற்ற உள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் கடந்த ஆண்டு கவனம் பெற்றது சாட்ஜிபிடி. இது ஓபன் ஏஐ நிறுவனத்தின் ஏஐ சாட் பாட். பயனர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நிறுவனத்துடன் வெளிப்படைத்தன்மையுடனும் சரியான முறையிலும் தொடர்பில் இல்லை என்று குற்றம்சாட்டி கடந்த வெள்ளிக்கிழமை, ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இயக்குநர் குழு, சாம் ஆல்ட்மேனை நிறுவனத்திலிருந்து நீக்கியது. சாம் ஆல்ட்மேனின் நீக்கத்தைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் தலைவர் கிரேக் ப்ரோக்மேன் உட்பட முக்கிய அதிகாரிகள், ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஓப்பன் ஏஐ நிறுனத்தின் முதலீட்டாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் சாம் ஆல்ட்மேனை மீண்டும் சிஇஓ-வாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT