Published : 20 Nov 2023 03:33 PM
Last Updated : 20 Nov 2023 03:33 PM
புதுடெல்லி: தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்ததால் 2021 முதல் 2022 வரை உலகளாவிய தட்டம்மை இறப்புகளில் 43% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் (CDC) ஆகியவற்றின் புதிய ஆய்வறிக்கையில், "தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்து வருவதைத் தொடர்ந்து, 2021-2022-ல் இருந்து உலகளவில் தட்டம்மை இறப்புகளின் எண்ணிக்கை 43% அதிகரித்துள்ளது. கடந்த 2021-ல் 22 நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்ததாலும், 2022-ல் 37 நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்ததாலும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 37 நாடுகளில் 28 நாடுகள் ஆப்பிரிக்காவையும், 6 நாடுகள் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியையும், 2 நாடுகள் தென்கிழக்கு ஆசியாவையும், ஒரு நாடு ஐரோப்பாவையும் சார்ந்தவை. இந்த நாடுகளில் தட்டம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதம் மிகக் குறைவாக இருந்ததே இதற்குக் காரணம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தட்டம்மை அதிகரிப்பும் இறப்பு அதிகரிப்பும் அதிர்ச்சியளிக்கிறது என்றும், இந்த நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதம் குறைந்து வருவது எதிர்பாராதது. தட்டம்மை நோய் மற்றும் இறப்புகளைத் தடுக்க அவசரமாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படுவது முக்கியமானது" என்று CDC-இன் உலகளாவிய நோய்த் தடுப்பு பிரிவின் இயக்குநர் ஜான் வெர்டெஃபியூயில் கூறியுள்ளார். ஏறக்குறைய 2.2 கோடி பேர் முதல் டோஸையும், 1.1 கோடி பேர் இரண்டாவது டோஸையும் தவறவிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸின் உலகளாவிய தடுப்பூசி கவரேஜ் விகிதம் 83% என்றும், இரண்டாவது டோஸ் கவரேஜ் விகிதம் 74% என்றும் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொள்வதன் மூலமே மக்களை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும் என்று கூறியுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் தட்டம்மையால் இறப்பதற்கான ஆபத்து அதிகமாக உள்ளதாகவும், இந்த நாடுகளில் தடுப்பூசி விகிதம் 66% மட்டுமே உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டில் முதல் தட்டம்மை தடுப்பூசி அளவை தவறவிட்ட 2.2 கோடி குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அங்கோலா, பிரேசில், காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேஷியா, மடகாஸ்கர், நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய 10 நாடுகளில் வாழ்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT