Published : 30 Jan 2018 03:53 PM
Last Updated : 30 Jan 2018 03:53 PM
இரண்டு வாரங்களுக்கு முன்னர், சிரியாவின் டோமா நகரின் ஒரு மருத்துவமனையின் முன், ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் துணியால் முற்றிலும் மூடப்பட்ட குழந்தையை மார்பில் அணைத்துக் கொண்டிருந்த தாய் ஒருவரது புகைப்படம் சர்வதேச அளவில் இயங்கும் இணையதளச் செய்தி தளங்களில் இடம்பெற்றது.
எதற்காக, ஏன் குழந்தை இவர்களது யுத்தத்துக்கு பலியானது என்று கண்ணீரால் கேட்டுக் கொண்டிருந்த அந்தத் தாயின் புகைப்படத்தை போன்று துயர் மிகு காட்சிகள் சிரியாவின் ஒவ்வொரு வீதிகளிலும் இடைவேளை இல்லாமல் நிரப்பப்பட்டு வருகின்றன.
சிரியாவில் நிகழும் வன்முறைகளைத் தடுக்க அமைதிப் பேச்சுவார்த்தை ஒருபுறம் அமைதியாக நடந்து கொண்டிருக்க, மக்கள் ஒவ்வொரு நாளும் மடிந்து கொண்டிருக்கிறார்கள். கொத்துகொத்தாக இறந்து கொண்டிருக்கிறார்கள்.
சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், தனது இரண்டு வயது மகனான எமிர் அல் பஷ்ஷாவை இழந்த ஹிபா ஹமோரிதான் அந்த புகைப்படத்திலிருக்கும் பெண்.
சிரியாவில் நடக்கும் தொடர் சண்டையால், மயானமான கஃப்ர் பாட்னா கிராமத்தில் அமைந்துள்ள தங்கள் இல்லத்திலிருந்து அருகிலுள்ள நகரத்துக்கு பசியால் வாடிக் கொண்டிருந்த தனது குழந்தைகளுக்காக உணவு வாங்குவதற்காக சென்றுள்ளனர் ஹிபாவும் அவரது கணவரும்.
அப்போது அவர்களை நோக்கி சிரிய அரசுப் படையின் குண்டுகள் விழுந்துள்ளன. இதில்தான் தனது இரண்டு வயது மகனான எமிர் மரணமடைந்ததை, ரத்தக் கறையுடன் அழுதுகொண்டே கூறும் ஹிபாவை அவரது கணவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
"என் குழந்தை பசியுடன் இறந்துவிட்டது அல்லா, "என் குழந்தை பசியுடன் இறந்துவிட்டது அல்லா" என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கும் ஹிபா தனது முதல் குழந்தையையும் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் குண்டுவெடிப்பில் பலி கொடுத்திருக்கிறார்.
"தற்போது எங்களுடன் எங்கள் பெண் குழந்தை மட்டும்தான் உடன் உள்ளது. அவளுக்கும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது" என்று கனத்த குரலில் கூறும் முகமத், எமிரி இறுதிச் சடங்கை கனத்த மனத்துடன் செய்யத் தொடங்குகிறார்.
"அல்லாவே எல்லா மக்களையும், எல்லா குழந்தைகளையும் காப்பாற்று. பஷார் உயிரை எடுத்துக் கொள்'' என்று அங்கிருந்து அந்த குடும்பம் நகர்கிறது.
தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிரிய உள் நாட்டுப் போரில் ஆம் சுமார் லட்சத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 4 லட்சத்துக்கு அதிகமான மக்கள் அகதிகளாக தங்கள் மண்ணை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
சிரியாவிலிருந்து துருக்கிக்குச் செல்ல முயன்ற, துருக்கியின் கடற்கரை மணலில் சரிந்து கிடந்த அய்லானை நினைவிருக்கிறது. அந்த அய்லானை போன்று இன்று பல இளம் பிஞ்சுகள் குண்டுகளாலும், வறுமையாலும் தொடர்ந்து மரணித்து வருகின்றனர்.
நடப்பவை எல்லாவற்றையும் பஷார் அல் ஆசாத் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆம் சிரிய மக்களது குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்யாவின் குண்டுகள் விழுவதை பஷார் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஏன் இந்த மவுனம் பஷார்?...
உண்மையில் சிரியாவில் நடக்கும் இந்த உள்நாட்டுப் போருக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? இஸ்லாமின் ஷியா பிரிவைச் சேர்ந்தவரான பஷார் ஆட்சி செய்வதை சிரியாவின் சன்னி பிரிவினர் ஏற்கவில்லை.
அங்கிருந்து பிரச்சினை தோன்றியது. சன்னி பிரிவினரே தற்போது கிளர்ச்சியாளர்களாகி யிருக்கிறார்கள். பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக ஆறு ஆண்டுகளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு இடையில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரும் சிரியாவில் தங்கள் ஆதிக்கம் ஏற்பட அவ்வப்போது அப்பாவி மக்கள் மீது தாக்குதலை தொடர்ந்து கொண்டிருகிறார்கள்.
இந்த கலவரங்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் ஆயுதங்களை ஏந்தி போரிட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதிகளை, நாங்கள் அழிக்கிறோம் என்று அழையா தோழனாக அமெரிக்கா தனது பங்குக்கு சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. சிரிய கிளர்ச்சியாளர்களுக்கும் அமெரிக்கா உதவி வருகிறது. இவ்வாறு முற்றிலும் வன்முறை என்னும் சிலந்தி வலையில் சிரியா மாட்டிக் கொண்டுள்ளது.
மத்திய கிழக்கில் மற்றுமொரு நாடு அதிகாரத்துக்காகவும், மதத்துக்காகவும் எல்லா பக்கங்களிலிருந்தும் தாக்கப்படுகிறது.
தொடரும் அமைதி பேச்சு வார்த்தைகள்
ஐ.நா. சபையின் முயற்சியின்பேரில் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் அதிபர் ஆசாத், எதிர்க்கட்சிகள் இடையிலான 2 நாள் அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த 25-ம் தேதி நடந்தது. ஆனால் இந்தப் பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.
மாறாக ஐ. நாவின் அமைதிக் குழு, சிரிய அரசின் கூட்டாளியாக உள்ளது என்று கூறிவிட்டு சென்று விட்டனர் சிரிய கிளர்ச்சியாளர்கள்.
சிரிய மக்கள் மீது, அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் பகுதி மீதும் குண்டு பொழியும் ரஷ்யாதான் அவ்வப்போது அமைதி தூதுவனாக இந்தச் சண்டையில் களமிறங்குமே..
அந்தவகையில் ரஷ்யா இந்த வாரம் ஏற்பாடு செய்திருந்த அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடுகிறீர்களா? என சிரிய கிளர்ச்சியாளர்கள் இந்தப் பேச்சுவார்த்தையை புறக்கணித்துவிட்டனர்.
2018-ம் ஆண்டிலாவது சிரியாவில் அமைதி திரும்பி எங்கள் மழலைகள் குண்டு கலக்காத காற்றை சுவாசிப்பார்களா என காத்திருக்கும் சிரிய மக்களின் காத்திருப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.... அமைதி திரும்புமா…சிரியாவில்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT