Published : 15 Nov 2023 08:00 AM
Last Updated : 15 Nov 2023 08:00 AM
காசா: காசாவில் தரைவழியாக முன்னேறும் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் நாடாளுமன்ற கட்டிடத்தை நேற்று கைப்பற்றியது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினர். அதன்பின் தரைவழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்கள் 1,200 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். 239 பேரை காசா பகுதிக்குள் கடத்திச் சென்றனர்.
இதனால் இஸ்ரேல் ராணுவம் காசாவின் வட பகுதியில் வான்வழித் தாக்குலில் ஈடுபட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த தாக்குதலில் காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் காசாவின் வட பகுதியில் சுமார் 15 லட்சம் பேர் இடம் பெயர்ந்து காசாவின் தென் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
காசா எல்லையில் பீரங்கி வாகனங்களுடன் காத்திருந்த இஸ்ரேல் ராணுவம், காசாவின் வட பகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி ஊடுருவியது. இஸ்ரேல் விமானப்படை ஹமாஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்களில் குண்டு மழை பொழிய, இஸ்ரேல் தரைப்படை படிப்படியாக முன்னேறி, ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றி வந்தது.
காசாவின் மருத்துவமனைகளில் பதுங்கியிருந்த ஹமாஸ் தீவிரவாதிகளையும் இஸ்ரேல் ராணுவத்தினர் வேட்டையாடினர். காசாவில் உள்ள முக்கிய மருத்துவமனையான அல்-குத் மருத்துவமனைக்கு வெளியே ராக்கெட் லாஞ்சர்களுடன் பாதுகாப்பு பணியில் இருந்த ஹமாஸ் தீவிரவாதிகள் 24 பேரை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவுத் தலைவர் காமிஸ் தபாபாஸ், சீனியர் கமாண்டர் தஷின் மஸ்லாம் உட்பட ஹமாஸ் படையின் முக்கிய அதிகாரிகள் அனைவரையும் இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த நாடாளுமன்ற கட்டிடத்தையும், இஸ்ரேல் ராணுவத்தினர் கைப்பற்றி உள்ளே புகுந்தனர். காசாவின் வடபகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து முக்கிய பகுதிகளும் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.
மருத்துவமனைகளில் அவலம்.. காசா நகரத்தில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையில் மின்சாரம், எரிபொருள், குடிநீர், அத்தியாவசிய மருந்துகள் என அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நோயாளிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, எடை குறைந்த குழந்தைகளை காப்பாற்றுவதற்கு இன்குபேட்டர் வசதி மிகவும் அத்தியாவசியமானதாகும். ஆனால், மின்சாரம் இன்றி அவற்றின் செயல்பாடு முடங்கியுள்ளதால் குழந்தைகளை வெளியில் எடுத்து வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, மனித உயிர்கள் கொத்து கொத்தாக செத்து மடிவதால் 7 குழந்தைகள் உட்பட 179 உடல்கள் ஒரே இடத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT