Published : 15 Nov 2023 04:41 AM
Last Updated : 15 Nov 2023 04:41 AM
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பு அருகேநேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானதால், மக்கள் பீதியடைந்தனர்.
இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் இந்தியப் பெருங்கடலில் கடலுக்கு அடியே 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து தென் கிழக்கே 800 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததாக புவியியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
தலைநகர் கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மிக கடுமையாக உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தநிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவிதபாதிப்பும் இல்லை என்றும், சேதம் எதுவும்ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பதால் சுனாமி பேரலை எழலாம் என மக்கள் பீதியடைந்தனர். ஆனால், தற்போதைய நிலையில் எந்தவித ஆபத்தும் இல்லை என்று புவியியல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல, சூடான், உகாண்டா எல்லை பகுதிகளிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு 4.9 என்ற புள்ளிகள் அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானது. கடலில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை ஐரோப்பிய மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள புவியியல் ஆய்வு மையம் (இஎம்எஸ்சி) தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT