Published : 11 Nov 2023 09:53 AM
Last Updated : 11 Nov 2023 09:53 AM

”உலகத் தலைவர்கள் ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்கே கண்டனம் தெரிவிக்க வேண்டும்; எங்களுக்கு அல்ல” - இஸ்ரேல் பிரதமர்

டெல் அவிவ்: காசாவில் பொதுமக்களுக்கு நேரும் அவலங்களுக்கு ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் தான் பொறுப்பாகும். இஸ்ரேல் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பாகாது. உலகத் தலைவர்கள் ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்குத் தான் கண்டனம் தெரிவிக்க வேண்டும் எங்களுக்கு அல்ல என்று பிரான்ஸ் அதிபரின் அறிவுரைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலடி கொடுத்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் 36-வது நாளை எட்டியுள்ளது. காசாவில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலுக்குப் பல்தரப்பில் இருந்து பலமாக அழுத்தம் எற்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவே மேக்ரான் பிபிசி-க்கு அளித்தப் பேட்டியில், "காசாவில் குண்டு வீசுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க வேண்டும். குண்டு வீசுதலுக்கு எந்த நீதியும் கற்பிக்க முடியாது. போர் நிறுத்தம் இஸ்ரேலுக்கு ஆதாயம் தரும். ஹமாஸ் தீவிரவாதிகளின் இஸ்ரேல் மீதான தாக்குதலைக் கண்டிக்கிறோம். அதேவேளையில் இஸ்ரேல் தற்காப்புக்காக நடத்தும் தாக்குதலை ஆதரித்தாலும் காசாவில் அப்பாவிகள் கொல்லப்படுவதை ஏற்கமுடியாது. போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளின் தலைவர்களும் இதையே வலியுறுத்துவார்கள் என நான் நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "காசாவில் பொதுமக்களுக்கு நேரும் அவலங்களுக்கு ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் தான் பொறுப்பாகும். இஸ்ரேல் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பாகாது.

ஹமாஸ் - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எங்களின் மக்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் அவர்கள் பிடியில் உள்ளனர். இது மனிநேயத்துக்கு எதிரான குற்றமாகும். அதேபோல் பள்ளிகள், மசூதிகள், மருத்துவமனைகளை ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு திட்டமிடும் மையமாக மாற்றிவைத்துள்ளனர். இஸ்ரேல் அப்பாவி பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாவதைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரத்துக்கு உட்பட்டு எடுக்கிறது. பொதுமக்கள் போர்ப் பகுதிகளில் இருந்து வெளியேற தொடர்ந்து அறிவுறுத்துகிறது. ஆனால் ஹமாஸ் - ஐஎஸ் இணைந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் தடுத்து அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது.

ஹமாஸ் தான் எங்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தினர் என்பதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் மக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர். ஆகையால், உலகத் தலைவர்கள் ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்குத் தான் கண்டனம் தெரிவிக்க வேண்டும் எங்களுக்கு அல்ல" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x