Published : 31 Jan 2018 12:43 PM
Last Updated : 31 Jan 2018 12:43 PM
சர்வாதிகாரியை எதிர்த்து தைரியமாக போராடும் ஈரான் மக்களுக்கு அமெரிக்கா துணை இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் பேசும்போது இதனை தெரிவித்தார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, "ஒரு நாட்டு மக்கள் சர்வாதிகாரி மற்றும் அந்நாட்டின் ஊழலை எதிர்த்து போராடும்போது, நான் அமைதியாக இருக்கப் போவதில்லை. சுதந்திரத்துக்காக போராடும் ஈரான் மக்களின் போராட்டத்துக்கு அமெரிக்கா துணை இருக்கும்" என்று கூறினார்.
ஈரானில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக அந்த நாட்டு மக்கள் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் தெஹ்ரான் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்கள் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிபர் ரவ்ஹானி பதவி விலக வேண்டும். சிரியா, பாலஸ்தீனம் உள்ளிட்ட வெளிநாட்டு பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல் ஈரான் மக்களின் நலன் குறித்து அரசு அக்கறை கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களில் பலர் பலியாகியுள்ளனர்.
ஈரானில் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது முதல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்நாட்டு மக்களுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து வந்தார்.
ட்ரம்பின் பதிவுகளுக்கு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி, "எங்கள் நாட்டு உள் விவகாரங்களில் தலையிட அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது. ஈரான் மக்கள் மீது அமெரிக்க அதிபர் தற்போது அனுதாபம் காட்டுகிறார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ஈரானை தீவிரவாதிகளின் தேசம் என்று கூறியதை அவர் மறந்துவிட்டார். ஈரானுக்கு எதிராக இருக்கும் ஒரு நபருக்கு அதன் மக்கள் மீது அனுதாபம் காட்ட எந்த உரிமையும் கிடையாது” என்று ட்ரம்பை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் ட்ரம்ப் மீண்டு ஈரானின் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT