Published : 10 Nov 2023 11:39 AM
Last Updated : 10 Nov 2023 11:39 AM

காசாவில் தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தம்: அமெரிக்கா சொன்ன தகவலும், இஸ்ரேல் பிரதமரின் விளக்கமும்

டெல் அவிவ்: காசாவில் தினமும் 4 மணி நேரம் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது விளக்கத்தை அளித்துள்ளார். முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தரப்பில், மனிதாபிமான அடிப்படையில் வடக்கு காசாவில் அன்றாடம் 4 மணி நேரம் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பைடனுன், குறைந்தது மூன்று நாட்களுக்கு மேலாவது போர் நிறுத்தம் மேற்கொள்ளும்படி இஸ்ரேலிடம் வேண்டியுள்ளதாகக் கூறினார். அதேவேளையில் "இஸ்ரேல் நிச்சயமாக முழுமையான போர் நிறுத்தத்தை இபோதைக்கு மேற்கொள்ள வாய்ப்பில்லை" என்றும் கூறினார்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், "போர் நிறுத்தம் என்பது ஆங்காங்கே மேற்கொள்ளப்படும். ஆனால் இது மீண்டும் மீண்டும் நடக்குமா எனத் தெரியவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நாங்கள் போர் மேற்கொண்டுள்ளோம். ஆகையால் வடக்கு காசாவில் உள்ள பொது மக்கள் பத்திரமாக வெளியேறும் வகையில் சில மணி நேரங்கள் தாக்குதல்கள் நிறுத்தப்படும். அதுவும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே. பொது மக்களின் நலன் கருதி இது மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி ஒருமாத காலம் ஆன நிலையில் காசா உருக்குலைந்துள்ளது. அங்கு இதுவரை 10 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த இஸ்ரேலுக்கு பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் அன்றாடம் 4 மணி நேரம் காசாவில் முழுமையாக தாக்குதல் நிறுத்தப்படும். இது அங்குள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயரவும், நிவாரண உதவிகள் முகாம்களுக்கு சென்று சேரவும் உதவியாக இருக்கும் வகையில் எடுக்கப்பட்ட முடிவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தரப்பில் இதுவர 1400 பேர் உயிரிழந்துள்ளனர். 239 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x