Published : 09 Nov 2023 10:25 AM
Last Updated : 09 Nov 2023 10:25 AM
வாடிகன்: மாற்று பாலினத்தவரும் கத்தோலிக்க ஞானஸ்நானம் பெற வாடிகனின் கோட்பாட்டு அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. அவர்களே ஞானப் பெற்றோராக இருந்தும் தமக்குத்தாமே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கத்தோலிக்க திருமணங்களில் சாட்சிகளாக இருக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோசப் நெக்ரி என்ற பாதிரியார் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 6 கேள்விகள் அடங்கிய ஒரு தொகுப்பை வாடிகனுக்கு அனுப்பியிருந்தார். அதில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்தும், அவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்குதல் குறித்தும் கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் வாடிகனின் நம்பிக்கைக்கான கோட்பாட்டுத் துறை பதிலளித்துள்ளது. போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் கூடிய மூன்று பக்க கடிதத்தை பிஷப் ஜோசப் நெக்ரிக்கு அனுப்பி வைத்தது.
அதில் மாற்று பாலினத்தவர் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோர் திருச்சபைகளில் ஞானஸ்நானம் பெறலாம் என்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நம்பிக்கையில் எந்தவித மாற்றங்களோ அல்லது குழப்பங்களோ இருக்கக் கூடாது என்ற நிபந்தனையையும் வாடிகன் முன்வைத்துள்ளது.
அதே போல, உள்ளூர் பாதிரியாரின் விருப்பத்துக்கேற்ப, மாற்று பாலினத்தவர் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் கிறிஸ்தவ திருமணங்களில் சாட்சியாக இருக்கலாம். அதற்கு உள்ளூர் பாதிரியாரின் ஒப்புதல் அவசியம் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் ஞானஸ்நானத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் பங்கு என்ன என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் எதுவும் கூறப்படவில்லை.
வாடிகனின் இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள LGBTQ ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இது மிக முக்கயமான ஒரு மைல்கல் என்று சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT