Published : 08 Nov 2023 11:43 AM
Last Updated : 08 Nov 2023 11:43 AM

காசா நகரின் மையப் பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் - சுரங்கங்கள் மீதான தாக்குதல் தீவிரம்

டெல் அவிவ்: இஸ்ரேல் - ஹமாஸ்களுக்கு இடையேயான போர் 33 வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ்களை சுற்றிவைளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ்களின் பரந்த சுரங்கப்பாதைகளைக் கண்டுபிடித்து தாக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

இஸ்ரேலில் உள்ள காசா பகுதியில் அக்.7-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய முன்னெப்போதும் நிகழ்ந்திராத தாக்குதலில் 1,400 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஹமாஸ்களை முற்றிலுமாக அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக பதில் தாக்குதல் நடத்தியது. காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இந்த பதில் தாக்குதலில் இதுவரை 10,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தரைவழியாகவும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், தனது படைகள் காசா நகரன் மையப்பகுதியை அடைந்து ஹமாஸ்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலின் தரைப்படைகள் ஹமாஸ்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பை தற்போது தாக்கத் தொங்கியுள்ளதாகவும், சுமார் நூறு கிலோமீட்டர் வரை நீண்டு செல்லும் சுரங்கப்பாதைகளை தகர்ப்பதற்காக இஸ்ரேஸ் ராணுவ பொறியாளர்கள் வெடிமருந்துக்களை பயன்படுத்தி வருவதாகவும் உயர் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே போர் தொடங்கி ஒரு மாதத்தை நிறைவடைந்ததைத் தெரிவிக்கும் வகையில் தொலைக்காட்சியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "ஒரு மாதத்தைக் கடந்துள்ள ஹமாஸ்களுக்கு எதிரான போர், அவர்கள் இதுவரை பார்த்திராதது. இஸ்ரேல் ராணுவம் மாபெரும் சக்தியுடன் முன்னேறி வருகின்றது. இஸ்ரேலின் தரைப்படைகள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் ஹமாஸ்களுக்கு எதிரான பிடியைத் தீவிரப்படுத்தி வருகின்றன என்று அவர் கூறியுள்ளார். ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹில்புல்லாக்கள் போரில் கலந்து கொள்ள விரும்பினால் அது மாபெரும் தவறு என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஹமாஸ்கள் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யும் வரை காசாவுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என்றும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.

இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர், யோவ் காலண்ட், ஹமாஸ்களை அழிப்பதில் இஸ்ரேல் ராணுவம் உறுதியாக உள்ளது; இஸ்ரேல் படைகள் காசாவின் மையப்பகுதிகுள் நுழைந்து விட்டன என்று தெரிவித்தார். இந்தநிலையில், உயிர்காக்கும் மருந்துப்பொருள்களைச் எடுத்துச்சென்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் வாகனங்கள் நேற்று காசா பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகின. 5 லாரிகள், இரண்டு பிற வாகனங்கள் மருந்துக்களை ஏற்றிச் சென்றுள்ளன. யார் இந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்பது தெரிவிக்கப்படாத நிலையில், இரண்டு வாகனங்கள் சேதமானதாகவும், ஓட்டுநர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருந்துகள் ஏற்றிச் சென்ற வாகனங்கள் தங்களின் பாதையை மாற்றிக்கொண்டு, அல் ஷிஃபா மருத்துவமனையில் மருந்துப்பொருள்கள் கொடுக்கப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேபோல் மெடிக்கல் சாரிட்டி டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (எம்எஸ்எஃப்) என்ற அமைப்பு, காசா அகதிகள் முகாமில் நடந்த வெடி குண்டுத்த தாக்குதலில் அங்கிருந்த எம்எஸ்எஃபின் இடம் நிர்மூலமாக்கப்பட்டது என்றும், ஊழியர் ஒருவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே போர் முடிவடைந்த பின்னர் காசாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பினை ஏற்பதாகவும், அதற்கு முன் பிணையக்கைதிகள் விடுவிக்கப்படுவதற்காக, போர் இடைநிறுத்ததுக்கு அனுமதி அளிப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் காசா மீதான இந்த நீண்டகால முற்றுகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க பாலஸ்தீனம் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x