Published : 07 Nov 2023 01:55 PM
Last Updated : 07 Nov 2023 01:55 PM
தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா தனது 'அனைத்து திறன்களையும்' பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் இன்னும் நீடித்து வரும்நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியை பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலின்போது இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்தும், இந்திய - ஈரான் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர் எனக் கூறப்படுகிறது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா தனது 'அனைத்து திறன்களையும்' பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார். மேலும்,"உடனடி போர் நிறுத்தம், தடையை நீக்குதல் மற்றும் காசாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குதல் போன்ற உலகளாவிய கூட்டு முயற்சிகளை தெஹ்ரான் ஆதரிக்கிறது. பாலஸ்தீன மக்களைக் கொலை செய்வது தொடர்வது உலகின் அனைத்து சுதந்திர நாடுகளையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும் இந்தப் போர் பிராந்தியத்துக்கு அப்பாற்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும். ஒடுக்கப்பட்ட மற்றும் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவது, மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீதான தாக்குதல்கள் எந்தவொரு மனிதனின் பார்வையில் இருந்தும் கண்டனத்துக்குரியது. மேலும் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாதது” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால நிலையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் போர் தீவிரமடைவதை தடுப்பது, தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை உறுதி செய்து, கலவரத்தால் பாதிக்கப்பட்ட காசாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீக்கிரமாக மீட்டெடுப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT