Published : 04 Nov 2023 06:35 PM
Last Updated : 04 Nov 2023 06:35 PM
அவில் டெவில்: காசாவில் அல்-ஃபகூரா (al-Fakhoora School) என்ற பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 54 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், போர் தீவிரமடையும் அபாயம் அதிகரித்துள்ளது. வடக்கு காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் பலமுறை எச்சரிக்கைவிடுத்த போதிலும், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறவில்லை. அதோடு, ‘போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போரிடும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், காசாவில் உள்ள பள்ளிகள், தங்குமிடங்கள், மருத்துவமனைப் பகுதிகள் மற்றும் ஆம்புலன்ஸ்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காசா நகரில் வெள்ளிக்கிழமை (நேற்று) ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் கொடூர தாக்குதல்: இது தொடர்பாக காசாவின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா (Ashraf al-Qudra) செய்தியாளர்களிடம் கூறியது: ”அக்டோபர் 7 முதல் 150 துணை மருத்துவர்கள் (paramedics) கொல்லப்பட்டுள்ளனர். 27 ஆம்புலன்ஸ் வாகனங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் பெரும்பாலனவர்கள் பள்ளிக்கூடத்தில் அமர்ந்திருந்த பெண்கள், குழ்ந்தைகள் எனத் தெரிகிறது. அவர்களின் எலும்புகள் மற்றும் சதைகள் பிளாஸ்டிக் பைகளில் சேகரிக்கப்பட்டன.
இஸ்ரேல் ராணுவம் அல்-ஃபகூரா (al-Fakhoora School) என்ற பள்ளி மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்தனர்; 54 பேர் காயமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 231 பேர் உயிரிழந்திருக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே போரின்போது மக்கள் வசிக்கும் பகுதி, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. ஆனால், தொடக்கம் முதலே இஸ்ரேல் போர் நெறிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தி வருவதாக பாலஸ்தீனம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சுமார் 2,200 பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பின்புலம்: இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி தாக்குதல் நடத்தியதால், காசா மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. காசாவின் வடக்கு பகுதியில் கடந்த 7-ம் தேதி முதல் வான்வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல், தற்போது தரைவழி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இரண்டு நாளில் இரு முறை நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது போர் குற்றத்துக்கு ஈடான செயல் என ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 3,760 குழந்தைகள் உட்பட 9,061 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத் துறை அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் முழுவதையும் இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்துவிட்டதாகவும், சண்டை நிறுத்தத்துக்கு தற்போது வழியே இல்லை என இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹமாஸ் தீவிரவாத பிரிவான எசிடைன் அல்-காசம் பிரிகேட்ஸ், “காசா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கருப்பு பைகளில் பிணமாகத்தான் வீடு திரும்புவர்” என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் 240 பேரை மீட்கும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிணைக் கைதிகளை தேடுவதற்காக காசா நகரில் அமெரிக்கப் படையும் ட்ரோன்களை பறக்கவிடுகிறது.
வடக்கு காசாவில் சண்டை தொடரும் நிலையில், காசாவில் உள்ள நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் ரஃபா எல்லை வழியாக எகிப்து நாட்டுக்கு தப்பிச் செல்கின்றனர். இந்த எல்லை திறக்கப்பட்டு கடந்த 2 நாட்களில் 72 குழந்தைகள் உட்பட 344 வெளிநாட்டினரும், காயம்அடைந்த பாலஸ்தீனர்கள் 21 பேரும் எகிப்து வந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காசா பகுதியில் சண்டை தொடரும் நிலையில் லெபனான் - இஸ்ரேல் எல்லையில் ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல், பதிலடி கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போரில் இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும், 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக சிக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT