Published : 03 Nov 2023 12:42 AM
Last Updated : 03 Nov 2023 12:42 AM
டெல் அவிவ்: லெபனானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிரியாத் ஷ்மோனா நகரின் மீது ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் சுமார் 12 ஏவுகணைகளை ஹமாஸ் ஏவியுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த மாதம் 7-ம் தேதி அன்று இஸ்ரேலின் தெற்கு பகுதியை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையிலான எல்லை ஓரத்தில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டின் பகுதியில் இருந்து பலரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் சிறை பிடித்து சென்றனர். அதையடுத்து காசா மீது தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். முதலில் வான்வழியாக மேற்கொண்ட இந்த தாக்குதல் தரைவழியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் காசாவில் பலி எண்ணிக்கை 9,000-ஐ தாண்டியுள்ளது என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு அமைப்புகள் மற்றும் உலக நாடுகள் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தாக்குதலை நிறுத்த முடியாது என இஸ்ரேல் தெரிவித்தது.
இந்த சூழலில் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஹமாஸ். பாலஸ்தீனத்தின் காசா நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஹமாஸ். லெபனான் நாட்டின் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு உள்ளது. இத்தகைய சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
காசா வாழ் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் படுகொலை தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனானில் இருந்து கிரியாத் ஷ்மோனா நகரை ஏவுகணை மூலம் தாக்கியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
காசாவில் 20,000 பேர் அடைக்கலம் கொண்டுள்ள 4 பள்ளிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஐ.நா தகவல் - காசா நகரில் சுமார் 20,000 பேர் அடைக்கலம் கொண்டுள்ள 4 பள்ளிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டதாக ஐ.நா தெரிவித்தது. 24 மணி நேரத்துக்குள்ளாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. இதில் பலர் காயமடைந்து உள்ளதாகவும், சுமார் 20 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் உறுதி செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment