Published : 02 Nov 2023 11:48 AM
Last Updated : 02 Nov 2023 11:48 AM
டெல் அவில்: காசாவின் ஜபாலியா அகதிகள் முகாமின்மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல், போர் குற்றங்களுக்கு சமமானது என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 25 நாட்களையும் கடந்துவிட்ட நிலையில், செவ்வாய் அன்று காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய கமாண்டர் இப்ரஹிம் பியாரி கொல்லப்பட்டார் என செய்திகள் வெளியாகின.
இந்த தாக்குதலில், இப்ரஹிம் பியாரி உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் தீவிரவாதிகள் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் லெஃப்டினண்ட் கர்னல் ஜொனாத்தன் கான்ரிக்கஸ் கூறியிருந்தார். ஆனால் இப்ரஹிம் பியாரி வீழ்த்தப்படவில்லை என்று ஹமாஸ் கூறியது. அதே சமயம் ஹமாஸ் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, 195 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 777 பேர் காயமடைந்துள்ளதாகவும், 120-க்கும் அதிமானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜபாலியா முகாம் மீதான தாக்குதலை ஈரான், எகிப்து, ஜோர்டான் போன்ற நாடுகள் கண்டித்துள்ளன. இஸ்ரேல் மனித உரிமை மீறல்களை செய்துவருவதாக அந்த நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் எக்ஸ் வலைதள பக்கத்தில், "அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவைக் கருத்தில் கொண்டு, இவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல் எனக் கருதுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT