Published : 01 Nov 2023 01:50 PM
Last Updated : 01 Nov 2023 01:50 PM
டெல் அவில்: காசாவில் தகவல் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன என்று பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். மாறி மாறி இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருவதில், இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் அதிக உயிரிழப்புகளையும், மனிதாபிமான நெருக்கடியைபம் ஏற்படுத்தி வருகிறது.
இதனால் காசாவில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் நீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இஸ்ரேல் போரை கைவிடுதாக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் காசாவில் இணையம் மற்றும் தொலைத் தொடர்புகளை முற்றிலுமாக துண்டித்தது. கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் பிறரை தொடர்பு கொள்ள் முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு மீண்டும் சேவை சீரானது குறிப்பிடத்தக்கது. இதுவரை வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது தரைவழித் தாக்குதலையும்தொடங்கியுள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனம் (பால்டெல்) தனது எக்ஸ் தளத்தில், " காசாவில் தகவல் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதை மக்களுக்கு அறிவிப்பதில் வருந்துகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இரண்டாவது முறையாக மீண்டும் இதுமாதிரி நடப்பதாக அப்பகுதியில் உள்ள மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.
‘இது இன அழிப்பு’ - இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 26 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் நேற்று (செவ்வாய்) காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் முக்கிய கமாண்டர் இப்ரஹிம் பியாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும் அதனைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் கூறி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் (Office of the United Nations High Commissioner for Human Rights, OHCHR) இயக்குநர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுவரை இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9800-ஐ நெருங்கியுள்ள நிலையில், ஹமாஸ் தரப்பு வெளிநாட்டு பிணைக் கைதிகளில் மேலும் சிலரை விடுவிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT