Published : 31 Oct 2023 10:16 AM
Last Updated : 31 Oct 2023 10:16 AM

போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை; அது ஹமாஸிடம் சரணடைவது போன்றது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

டெல் அவிவ்: போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல், ஹமாஸிடம் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போராடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. இன்னும் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. அப்பாவி மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் காசா வீதிகளில் உலாவும் புகைப்படங்கள் வெளியாகி சக மனிதர்களை கவலையில் ஆழ்த்துகிறது. நேற்று நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கிக் கொண்டிருப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல், ஹமாஸிடம் சரணடைவதற்கு சமமானது. பயங்கரவாதத்துக்கு அடிபணிவது போல ஆகிவிடும். இது நடக்காது... ஹமாசால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும்.

பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்குப் பிறகும், இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகும் அமெரிக்கா போர் நிறுத்தத்தை நிராகரித்தது. அதே போன்று இஸ்ரேல் மீது அக்டோபர் 7 ஆம் நாள் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் போர் நிறுத்தம் என்பதை ஒப்புக்கொள்ள இயலாது.இந்தப் போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போராடும்'' என கூறியுள்ளார்.

அப்பாவி மக்கள் பாதிப்பு: பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரத்தில் இன்று 93 பேர் பலியாகியுள்ளனர். அக்டோபர் 7 முதல் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8,306 பேர் கொல்லப்பட்டனர். இதில் 3,457 குழந்தைகள், 2,136 பெண்கள் மற்றும் 480 முதியவர்கள் அடங்குவார்கள். மேலும், 21,048 பேர் காயமடைந்துள்ளனர். 1,050 குழந்தைகள் உட்பட 1,950 பேரை காணவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால், தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் மற்றும் தோல் நோய்கள் பரவலாக காணப்படுகிறது எனக் கூறப்பட்டிருக்கிறது. "எங்கள் மக்கள் மீதான போரை நிறுத்துங்கள்" என்று பாலஸ்தீன பிரதமர் முஹம்மது தெரிவித்திருக்கிறார்.

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x