Published : 28 Oct 2023 05:54 PM
Last Updated : 28 Oct 2023 05:54 PM

தொடர்பு எல்லைக்கு அப்பால் காசா - தரைவழித் தாக்குதலில் இஸ்ரேல் தீவிரம்; அழியும் ஹமாஸ் சுரங்கப் பாதைகள்

காசாநகர்: காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் சூழலில், நேற்றிரவு நடந்த இடைவிடாத தாக்குதல் காரணமாக அங்கு தொலைத்தொடர்பு சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட காசா முழுவதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

காசாவை நோக்கி நேற்றிரவு இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேலின் தெற்கும் - காசாவின் வடக்கும் இணையும் எல்லையில் புகை மண்டலம் சூழ்ந்ததாக அங்குள்ள பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் வடக்கு காசா தெற்கிலிருந்து தொலைத் தொடர்பு ரீதியாக முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போர் அத்துமீறல்கள் குறித்து எந்த உண்மையான நிலவரமும் வெளியில் தெரியாத சூழல் உருவாகலாம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு குழு கவலை தெரிவித்துள்ளது.
தெற்கில் கான் யூனிஸ் மருத்துவமனைக்கு மருந்து நிவாரணப் பொருட்கள் வந்து சேர்ந்தாலும் கூட, அது கடலில் கலந்து துளி போன்ற அளவிலேயே இருப்பதாக களத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள் அனுப்பிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஸ்க் நீட்டிய உதவிக் கரம்: காசாவில் இஸ்ரேல் தாக்குதலால் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மனிதநேய அமைப்புகள் தங்களின் சேவைகளைத் தொடர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஐ.நா. அமைப்புகள், செஞ்சிலுவை போன்ற சங்கங்களின் தேவைக்காக ஸ்டார் லிங்க் மூலம் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஏற்கெனவே உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது உக்ரைன் தொலைதொடர்புக்கு எலான் மஸ்கின் ஸ்டார் லிங்க் சேவை வழங்கப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனைகளுக்குக் கீழ் ஹமாஸ் பதுங்கிடங்களா? - ஹமாஸ் அமைப்பின் சுரங்கப் பாதைகள் உலகறிந்தவை. அந்த சுரங்கப் பாதைகள்தான் காசாவில் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்த இஸ்ரேலுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் மருத்துவமனைகளுக்குக் கீழ் இருக்கும் சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்து மக்களை நோயாளிகளைக் கேடயமாக வைத்து தப்பித்துவருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டு ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

அடுத்தடுத்து வீழும் படைத் தலைவர்கள்: ஹமாஸ் படையின் அப்துல் ரஹ்மான், கலீல் மஹ்ஜாஸ், மற்றும் கலீல் டெத்தாரி ஆகிய மூன்று துணைத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதனையொட்டி, நேற்று ஹமாஸ் அமைப்பின் புலனாய்வு பிரிவின் துணைத் தலைவர் ஷாதி பாரூத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு படை கொன்றுள்ளதாக தகவல் வெளியானது. காசாவில் நேற்று இரவு வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது இஸ்ரேல். இந்தத் தாக்குதலில், ஹமாஸின் வான்வழிப் பிரிவின் தலைவரான இஸ்ஸாம் அபு ருக்பே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான ஷின் பெட் தெரிவித்திருக்கிறது.

கடந்த அக்.7-ஆம் தேதி இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் முக்கிய பங்காற்றிய ருக்பே, ஆளில்லா விமானங்கள், பாராகிளைடர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளை நிர்வகித்து வந்தார். அக்டோபர் 14-ஆம் தேதி ஹமாஸ் விமானப்படையின் முந்தைய தலைவர் முராத் அபு முராத்தை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

தகர்க்கப்படும் சுரங்கப் பாதைகள்: இஸ்ரேல் தனது தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் சூழலில் இஸ்ரேல் பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் டேனிய ஹகாரி, களத்தில் இஸ்ரேலியப் படைகள் முன்னேறி வருகின்றன. நாங்கள் வலுவிழந்த எதிரியை எதிர்கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், ஹமாஸ் தரப்போ இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தினாலும் நாங்கள் அதை எதிர்கொள்ளும் திறனோடு இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. இதுவரை 150 சுரங்கப் பாதைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஏவுகணைகள் தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதுதவிர பாரா க்ளைடர்கள் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் 220 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது பதிலடியைத் தொடங்கியது. இப்போதுவரை காசாவில் 7703 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் காசாவுக்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர். வடக்கு காசாவில் இருப்பவர்கள் தெற்கு நோக்கிச் சென்றுவிடுமாறு இஸ்ரேல் தொடர்ந்து எச்சரித்த நிலையில் தெற்குக்கு லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். காசாவில் உணவு, மருந்துகள், குடிதண்ணீருக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது தொலைதொடர்பு சேவைகளும் தடைபடும் சூழல் உருவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x