Published : 28 Oct 2023 02:49 PM
Last Updated : 28 Oct 2023 02:49 PM
டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் வான்வழிப் பிரிவின் தலைவரான இஸ்ஸாம் அபு ருக்பே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான ஷின் பெட் தெரிவித்திருக்கிறது.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்னும் சுவாலை விட்டு எரிய தொடங்கியிருக்கிறது. ஹாமஸின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மிகத் தீவிரமான பதிலடியைக் கொடுத்து வருகிறது. இஸ்ரேல் தனது அடுத்தடுத்த நகர்வுகளை கண்ணும் கருத்துமாக எடுத்து வைக்கிறது. இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பு தங்களுடைய முக்கியப் படைத் தளபதிகளை அடுத்தடுத்து இழந்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் இஸ்ரேல் உடனான போரில் ஹமாஸ் படையின் அப்துல் ரஹ்மான், கலீல் மஹ்ஜாஸ், மற்றும் கலீல் டெத்தாரி ஆகிய மூன்று துணைத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதனையொட்டி, நேற்று ஹமாஸ் அமைப்பின் புலனாய்வு பிரிவின் துணைத் தலைவர் ஷாதி பாரூத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு படை கொன்றுள்ளதாக தகவல் வெளியானது.
அந்த அதிர்ச்சிகளில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் மீளுவதற்குள் இன்னும் ஒரு பேரிடி இறங்கியிருக்கிறது . காசாவில் நேற்று இரவு வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது இஸ்ரேல். இந்தத் தாக்குதலில், ஹமாஸின் வான்வழிப் பிரிவின் தலைவரான இஸ்ஸாம் அபு ருக்பே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான ஷின் பெட் தெரிவித்திருக்கிறது.
கடந்த அக்.7-ஆம் தேதி இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் முக்கிய பங்காற்றிய ருக்பே, ஆளில்லா விமானங்கள், பாராகிளைடர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளை நிர்வகித்து வந்தார். அக்டோபர் 14-ஆம் தேதி ஹமாஸ் விமானப்படையின் முந்தைய தலைவர் முராத் அபு முராத்தை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT