Published : 27 Oct 2023 06:15 AM
Last Updated : 27 Oct 2023 06:15 AM
மைனே: அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
லீவிஸ்டன் நகரில் உணவகம் மற்றும் கேளிக்கை விடுதியில் புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களை சுற்றிவளைத்த பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சிசிடிவியில் பதிவானகாட்சிகளைக் கொண்டு விசாரணையை தொடங்கினர். இதில், இந்ததுப்பாக்கிசூட்டை நடத்தியவர் 40 வயதான ராபர்ட் கார்ட் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரரான இவர், துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளராவார்.
குடும்ப வன்முறைக்காக சில மாதங்களுக்கு முன்பு போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவர் மனநல மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து தனது காரில் ஏறி ராபர்ட் தப்பியுள்ளார். அந்த காரை போலீஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ராபர்ட் கார்ட் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அவரது மறைவிடம் குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆபத்தை உணர்ந்து லீவிஸ்டன் குடியிருப்புவாசிகள் யாரும் வெளியில்வரவேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்களை மூடவும், பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ராபர்ட் கார்டை பிடிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT