Published : 26 Oct 2023 03:42 PM
Last Updated : 26 Oct 2023 03:42 PM

‘குண்டு மழைக்கு மத்தியில் குழந்தையை எப்படிப் பெற்றெடுப்போம்?’ - காசா கர்ப்பிணிகளின் கண்ணீர்க் கதை

காசா நகர்: "திரும்பிய பக்கமெல்லாம் கட்டிட இடிபாடுகள். எப்போது எங்கு குண்டு விழும் என்று தெரியாது. அவசரமாக எல்லோரும் எங்கேயாவது ஓடினாலும் கூட ஓட முடியாத நிலையில் இருக்கும் நாங்கள் குண்டு மழைக்கு மத்தியில் குழந்தையை எப்படிப் பெற்றெடுப்போம்" என வேதனையுடன் கேட்கிறார் காசாவில் உள்ள கர்ப்பிணிப் பெண்ணான அப் பார்பரி.

நிவீன் அல் பார்பரி என்ற அந்த 33 வயது கர்ப்பிணிப் பெண் கண்ணீர் மல்கக் கூறியது: “ஒவ்வொரு முறை குண்டு சத்தம் கேட்கும்போதும் எனது அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. பயம் அதிகரிக்கிறது. எனக்கு கர்ப்பக் கால சர்க்கரை வியாதி உள்ளது. கடந்த அக்டோபர் 7-ஆம் தேதிக்கு முன்னர் நான் தொடர்ச்சியாக மருத்துவமனை சென்றுவந்தேன். ஆனால் இப்போது எனக்கு எந்த மருத்துவ உதவியும் இல்லை.

இங்கே குண்டு மழை பொழிவதை நிற்கவே இல்லை. அந்தக் குண்டுகள் கட்டிடம், மனிதர்கள், மரங்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை. ஒவ்வொரு நாளும் என் யோசனை ஒன்றே ஒன்றுதான். நான் எங்கே எப்படி குழந்தையைப் பெற்றெடுப்பேன் என்றே அந்த யோசனை நீள்கிறது. அதை நினைத்து அஞ்சி அஞ்சியே வாழ்கிறேன். அடுத்த நொடி யார் வீட்டின் மீது குண்டுகள் விழும். யார் யாரெல்லாம் உயிரோடு இருப்போம் என்று எனக்கு எதுவும் தெரியவில்லை. நானும் என் குழந்தையும் பாதுகாப்பாக இருக்கிறோம் என நம்புகிறேன்.

போரில் உயிரிழக்கும் காயமடையும் குழந்தைகளின் முகங்கள், காயங்களுடன் இருக்கும் குழந்தைகளைப் பார்க்கும்போது என் கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து நான் அஞ்சுகிறேன். இந்த ஏவுகணைகளில் இருந்து குண்டுகளில் இருந்து எதிராகாலக் குழந்தைகளாவது தப்பிக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாக உள்ளது. இவ்வாறு அவ்வாறு கூறினார்.

அல் பர்பாரிக்கு இம்மாதம் இறுதியில் குழந்தை பெற்றுக் கொள்ள தேதி குறிக்கப்பட்டிருக்கிறது. அல் பர்பாரியைப் போல் ஆயிரக் கணக்கான கர்ப்பிணிகள் காசாவில் உள்ளனர். ஐ.நா. அறிக்கையின்படி காசாவில் 50,000 கர்ப்பிணிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் எவ்வித மருத்துவ சேவைக்கும் வழியில்லாமல் உள்ளனர். கடந்த வாரம் கர்ப்பிணிகளைக் காக்க ஐ.நா.வின் யுஎன்எஃப்பி அமைப்பு அவசர கால சுகாதார சேவைகளை ஏற்பாடு செய்யும்படி வலியுறுத்தியது.

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் வாலித் அபு ஹதாப் கூறுகையில், "காசாவில் 23 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ளவர்களில் வடக்கில் இருந்து பல லட்சம் பேர் தெற்குக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறாக வரும் கர்ப்பிணிகள் பலரை முதலில் இருந்து பரிசோதித்து சிகிச்சை அளிக்கக் கூடிய சூழல் இல்லை. கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான சிகிச்சை தேவைப்படும். சிலருக்கு ரத்த அழுத்தம் இருக்கலாம், சிலருக்கு சர்க்கரை இன்னும் சிலருக்கு குழந்தை பிறக்கும்போது சிக்கல் ஏற்படலாம். இந்தச் சூழலில் பிரசவங்கள் பார்ப்பதே கூட சிக்கலாகி உள்ளது" என்றார்.

கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்படும் பதில் தாக்குதல்களில் காசாவில் இதுவரை 6000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த சர்வதேசத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x