Published : 26 Oct 2023 03:29 PM
Last Updated : 26 Oct 2023 03:29 PM

“இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தட திட்டத்தை தடுக்கவே இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்” - பைடன் சந்தேகம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: ‘இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தட திட்டத்தை தடுக்கவே, இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியிருக்கலாம். இந்தத் தாக்குதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தேகித்துள்ளார்.

டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் ஜி20 மாநாடு நடந்தது. அப்போது இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே ஒரு பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதற்கான மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், ஐரோப்பிய யூனியனின் தலைவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி இந்தத் திட்டத்தை அறிவித்தார்.

இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் என்பது ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே கடல், ரயில் மற்றும் சாலை இணைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் சரக்கு பரிவர்த்தனைக்கான புதிய வழியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், அண்மையில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வர்த்தக வழித்தடம் உலக வர்த்தத்தின் அடித்தளமாக அமையும். அதற்கான முன்முயற்சி இந்திய மண்ணில் எடுக்கப்பட்டது என்பது உலக வரலாற்றில் இடம்பெறும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் இந்தத் தாக்குதலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியா - ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தட திட்டத்தை தடுக்கவே, இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியிருக்கலாம். ஹமாஸ் தாக்குதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நான் உறுதியாக நம்புகிறேன். இதற்கு என்னிடம் ஆதாரம் கிடையாது. ஆனால், என்னுடைய உள்ளுணர்வு இந்தத் தகவலை என்னிடம் சொல்கிறது.

அண்மையில் இந்தத் திட்டம் குறித்து ஜோர்டான், எகிப்து, சவுதி அரேபியா, பாலஸ்தீன நாட்டு தலைவர்களுடன் பேசினேன். இஸ்ரேலுக்கான பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ஒட்டுமொத்த பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு நாம் செய்யும் முன்னேற்றப் பணிகளை விட்டுவிட முடியாது’’ என்று பைடன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x