Published : 25 Oct 2023 07:31 PM
Last Updated : 25 Oct 2023 07:31 PM

மருந்து, பணியாளர்கள் பற்றாக்குறை: காசாவில் சுகாதார சேவைகள் முற்றிலும் முடக்கம்

காசா: காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், அந்நகரில் சுகாதார சேவைகள் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவில் சுகாதார சேவைகள் முடக்கம்: காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், காசாவில் சுகாதார சேவைகள் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அஷ்ரஃப் அல்-குத்ரா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “அடுத்தடுத்த தாக்குதல்கள், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் மருந்துகள் பற்றாக்குறை காரணமாக காசாவில் மருத்துவ சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் 344 குழந்தைகள் உட்பட 756 பேர் உயிரிழந்துள்ளனர். அவசர உதவிகளை கோரி வருகிறோம். ஆனால், சர்வதேச நாடுகள் எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை" என வேதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது உறுதியாகியுள்ளது. காசாவில் இருந்து 220 கி.மீ. தொலைவில் உள்ள தெற்கு இஸ்ரேலிய துறைமுக நகரமான ஈலாட்டை நோக்கி ஏவுகணைகளை ஏவியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம், ஏவுகணை திறந்தவெளியில் விழுந்ததாக தெரிவித்துள்ளது. ஆனால், அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு, ஹமாஸ் செலுத்திய மிக நீண்ட தூர ஏவுகணை தாக்குதல் இது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை.

‘ஹமாஸ் தீவிரவாத அமைப்பு அல்ல’ - "ஹமாஸ் தீவிரவாத அமைப்பு அல்ல, அது ஒரு விடுதலைக் குழு" என துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய எர்டோகன், "பாலஸ்தீன ராணுவ குழுவான ஹமாஸ் தீவிரவாத அமைப்பு அல்ல, அது ஒரு விடுதலைக் குழு. பாலஸ்தீன நிலங்களையும் மக்களையும் பாதுகாக்க அந்த விடுதலைக் குழு போரை நடத்துகிறது.

ஆனால், இஸ்ரேல் ஒரு நாட்டை போல் செயல்படாமல், தீவிரவாத குழு போல் நடக்கிறது. தற்காப்பு செயல்பாடு என்கிற பெயரில் காசா மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்துகிறது. மனிதாபிமானத்துக்கு எதிராக இஸ்ரேல் குற்றம் புரிகிறது. இஸ்ரேல் உடனடியாக இந்த காட்டுமிராண்டித்தை நிறுத்த வேண்டும். உலக நாடுகள் இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டித்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேலுக்காக மேற்குலக நாடுகள் கண்ணீர் சிந்துவது மோசடியின் வெளிப்பாடு. மத்திய கிழக்கில் அமைதியை உறுதிப்படுத்த இஸ்லாமிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

சிரியா விமான நிலையத்தில் இஸ்ரேல் தாக்குதல்: சிரியாவின் அலெப்போ விமான நிலையத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலை சிரிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதலை அடுத்து அலெப்போ விமான நிலைய செயல்பாடுகள் தற்போது முடக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேலிடம் இருந்து இந்த தாக்குதல் தொடர்பாக எந்தவித தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

காசாவில் உயிரிழப்பு அதிகரிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 756 பேர் உயிரிழந்தது உப்டட, அக்டோபர் 7 முதல் காசாவில் 6,546 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 2,704 குழந்தைகள் அடக்கம். மேலும் 17,439 பேர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இஸ்ரேலில் இதுவரை 1405 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 5431 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை, காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உணவு, குடிநீர், மின்சாரமின்றி காசா மக்கள் தவித்து வருகின்றனர். காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-அஹ்லி மருத்துவமனை மீது 4 நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதல் உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது.

திங்கள்கிழமை காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. அதே வேளையில், ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் இறந்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x