Published : 24 Oct 2023 10:02 PM
Last Updated : 24 Oct 2023 10:02 PM
தெஹ்ரான்: இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக இஸ்லாமிய உலகம் ஒன்றிணைய வேண்டும் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இஸ்ரேல் இன்று இதுபோல் காசாவில் குண்டுமழை பொழிந்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கான சவுதி தூதர் அப்துல்லா பின் சவுத் அல் அனாஸியை வரவேற்றுப் பேசிய அதிபர் இப்ரஹிம் ரைஸி, "ஒன்றிணைந்த முஸ்லிம் நாடுகளின் ஒருமித்த நிலைப்பாடு இன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்தும், அதன் மேற்கத்திய ஆதரவாளர்களிடமிருந்தும் அவர்களின் அடக்குமுறைகளிலும் முஸ்லிம்களைக் காப்பாற்றியிருக்கும். இனியாவது இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமை ஓங்க வேண்டும்" என்றார்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த காலங்களில் கடைபிடித்து வந்தன. தற்போது பகையை மறந்து நட்புறவில் இரு நாடுகளும் ஈடுபடத் தொடங்கியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. ஈரான் - சவுதி அரேபியா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறாக நீண்ட காலமாக முறிந்திருந்த சவுதி - ஈரான் உறவு சீன தலையீட்டால் மீண்டும் துளிர்த்துள்ள நிலையில் ஈரானுக்கான புதிய சவுதி தூதர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை வரவேற்கும்போது அதிபர் ரைஸி மேற்கூறியவாறு பேசினார். அவரது பேச்சு கவனம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT