Published : 24 Oct 2023 06:08 PM
Last Updated : 24 Oct 2023 06:08 PM
லண்டன்: இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பிரிட்டனின் பெல்பாஸ்ட், பிர்மிங்காம், கார்டிப் உள்ளிட்ட நகரங்களில் பேரணி நடந்தது.
இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கும் இடையே இரண்டு வாரங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில், காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தப்பட்ட தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இரு குழுக்களும் ஈவு இரக்கமின்றி மாற்றி மாற்றி பதில் தாக்குதல் நடத்தி வருவதில் பொதுமக்கள், அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள்தான் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில், ஹமாஸுக்கு எதிரான மோதலில் இஸ்ரேல் வெற்றி பெற இங்கிலாந்து விரும்புவதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பிரிட்டனின் பெல்பாஸ்ட், பிர்மிங்காம், கார்டிப் உள்ளிட்ட நகரங்களில் நேற்று பேரணி நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது ஜிகாத் தொடர்பான கோஷங்கள் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் இதைக் கண்டித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “வார இறுதியில் பிரிட்டன் நகரத் தெருக்களில் வெறுப்புணர்வை காண முடிந்தது. அப்போது ஜிகாத்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது யூத சமூகத்துக்கு மட்டுமல்ல, நமது ஜனநாயக விழுமியங்களுக்கும் அச்சுறுத்தலாகும்.
நமது நாட்டில் யூதர்களுக்கு எதிரான போக்கை சகித்துக் கொள்ள முடியாது. தீவிரவாதம் தலைதூக்கியிருக்கிறது. காவல்துறை இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT