Published : 24 Oct 2023 12:29 PM
Last Updated : 24 Oct 2023 12:29 PM
கொழும்பு: இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று இலங்கை அமைச்சரவை தெரிவித்திருக்கிறது.
இலங்கை சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மக்கள் உணவு, உடை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சிரமப்பட்டு அகதிகளாக வெளியேறினர். ஆனால் இலங்கை அரசு தனது நாட்டின் பெருமளவு வருவாயை சுற்றுலாத்துறையை நம்பியே இருக்கிறது. அதை வளப்படுத்த அவ்வப்போது பல முயற்சிகளை செய்து வருகிறது.
ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றறொரு நாட்டிற்குள் செல்ல விசா தேவைப்படுகிறது. சில நாடுகளுக்கு செல்ல எளிமையான முறையில் விசா பெற்றுவிடலாம். அதேவேளையில் கடுமையான விசா நடைமுறைகளைப் பின்பற்றும் சில நாடுகளும் உள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என இலங்கை அமைச்சரவை தெரிவித்திருக்கிறது.
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு இலவச விசா வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி செவ்வாய்க்கிழமை (இன்று) தெரிவித்தார்.
அமைச்சரவை ஒப்புதலுடன் இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31 தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது. இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என இலங்கையின் சுற்றுலா அமைச்சரகம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT