Published : 21 Oct 2023 11:58 AM
Last Updated : 21 Oct 2023 11:58 AM

“இந்தியாவின் முடிவு ஏற்புடையது அல்ல” - கனடா தூதரக அதிகாரிகள் விவகாரத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து வருத்தம்

வாஷிங்டன்: கனடா இந்தியாவில் உள்ள தனது தூதர அதிகாரிகளைத் திரும்ப அழைத்துக் கொண்டதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் வருத்தம் தெரிவித்துள்ளன. மேலும், இந்தியாவில் உள்ள கனடா தூதர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என்று இந்தியாவை வலியுறுத்தியுள்ளன.

காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் சர்ச்சை நீடிக்கும் நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுவிட்டது. இந்தியா விதித்த கெடு முடிவடைந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்திவ் மில்லர் கூறுகையில், "இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளும் இந்தியாவின் வலியுறுத்தலின் படி, கனடா தனது 41 தூதரக அதிகாரிகளைத் திரும்ப பெற்றுக்கொண்டது எங்களுக்கு கவலையளிக்கிறது.

சிக்கல்களை பேசித் தீர்த்துக்கொள்வதற்கு களத்தில் தூதரக அதிகாரிகள் இருப்பது மிகவும் அவசியம். இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க வலியுறுத்த வேண்டாம் என்றும், கனடாவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி இந்தியாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். கனடாவின் தூதரக பணிகளுக்காக அங்கீகரிக்கப்பட்டவர்களின் சலுகைகள் மற்றும் விலக்குள் உட்பட, 1961ம் ஆண்டு வியன்னா மாநாட்டின் ஒப்பந்தத்தின் ராஜதந்திர உறவுகளுக்கான தனது கடமையை இந்தியா நிறைவேற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். மேலும், காலிஸ்தான் குழு தலைவர் கொலை வழக்கில் கனடாவின் குற்றச்சாட்டை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், அந்த விசாரணைக்கு ஒத்துழைக்கும் படி இங்கிலாந்துடன் இணைந்து வலியுறுத்துவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த விவாகாரம் குறித்து பிரிட்டன் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கனடா தூதரக அதிகரிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கோரும் இந்தியாவின் முடிவு எங்களுக்கு ஏற்புடையது அல்ல. தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் சலுகைகளை விலக்கிக்கொள்வது வியன்னா மாநாட்டு கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளுடன் ஒத்துப்போகவில்லை" என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட அமெரிக்காவும், இங்கிலாந்தும் விரும்பாது; ஆசியாவில் உள்ள அவர்களின் எதிரியான சீனாவை எதிர்கொள்ள அவர்கள் இந்தியாவுடன் சுமூகமான போக்கினை கடைபிடிப்பது அவசியம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னணி: கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார். கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. மேலும், இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு இந்தியா கனடாவுக்கு கோரிக்கை விடுத்தது. இந்தியாவில் இருக்கும் கனேடிய அதிகாரிகளை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேடு தேதிக்கு பின்னர் இந்தியாவில் இருக்கும் அவர்களின் தூதரகப் பொறுப்புகள் நீக்கப்படும் என்றும் இந்தியா கூறியிருந்தது. இதனால் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x