Published : 21 Oct 2023 06:29 AM
Last Updated : 21 Oct 2023 06:29 AM
டெல் அவிவ்: லெபனான் எல்லையை ஒட்டிய இஸ்ரேல் பகுதிகளில் வசிக்கும் 20,000 பேரை வெளியேற்ற அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் நேற்று 14-வது நாளாக நீடித்தது. பாலஸ்தீனத்தின் காசாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஹமாஸின் கடற்படை பிரிவை சேர்ந்த மூத்த கமாண்டர் ஷாலாபி கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா எல்லைப் பகுதியில் உள்ள கோலானிக்கு சென்று வீரர்களை ஊக்கப்படுத்தினார். இஸ்ரேல் ராணுவ அமைச்சர் யோவா கேலான்ட், காசா எல்லைப் பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அவர் கூறும்போது, “ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் 3 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்படும். 2-வது கட்டமாக காசாவுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தப்படும். போரில் வெற்றி பெற்ற பிறகு 3-வது கட்டமாக காசாவில் புதிய பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும்" என்றார்.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, "காசாவில் தரைவழி தாக்குதலுக்கு தயாராக உள்ளோம். ராணுவ தலைமை அனுமதி கிடைத்தவுடன் காசாவுக்குள் நுழைவோம்" என்றன.
ஹிஸ்புல்லா, ஹவுத்தி தாக்குதல்: காசா மக்களுக்கு ஆதரவாக லெபனான் நாட்டை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தின. இதில் இஸ்ரேலிய வீரர்கள் சிலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் லெபனான் எல்லைகளை குறிவைத்து அதிநவீன ஏவுகணைகளை வீசின. மேலும் ட்ரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் சிலர் உயிரிழந்தனர். இரு தரப்புக்கும் இடையே சண்டை தீவிரமடைந்து வருகிறது.
ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தாக்குதலால் லெபனான் எல்லையில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவுக்குள் வசிக்கும் இஸ்ரேலிய மக்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த சூழலில் லெபனான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இருந்து மேலும் 20,000 பேரை வெளியேற்ற இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது.
ஏமன் நாட்டில் செயல்படும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைகளுக்கு ஈரான் ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது. இந்த சூழலில் காசா மக்களுக்கு ஆதரவாக ஹவுத்தி கிளர்ச்சி படை வீரர்கள், இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஏராளமான ஏவுகணைகளை வீசினர். இஸ்ரேல் கடல்பகுதியில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க போர்க்கப்பல், இந்த ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழித்தன.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறும்போது, “ஹவுத்தி கிளர்ச்சிப் படையின் ஏவுகணைகள், ஏராளமான ட்ரோன்களை நடுவானில் தாக்கி அழித்தோம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இதுவரை 4,137 பேர் உயிரிழந்துள்ளனர். 13,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காசா பகுதியில் 900 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தேவாலயம் இருந்தது. இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் அந்த தேவாலயம் இடிந்தது. அங்கு தஞ்சமடைந்திருந்த பலர் உயிர் இழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT