Published : 20 Oct 2023 03:08 PM
Last Updated : 20 Oct 2023 03:08 PM

எல்லையில் காத்திருக்கும் நிவாரணப் பொருட்கள்: நரகத்தின் வாயிலாக காசா மாறுவதாக ஐ.நா பிரதிநிதி வேதனை

காசா: "காசா நகரம் கடந்த சில வாரங்களாக நரகத்தின் வாயிலாக மாறியிருக்கிறது" என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமையைச் சேர்ந்த ஜூலியடே டோமா கூறியுள்ளார். மேலும் அவர் "முற்றுகையிடப்பட்டுள்ள காசா மக்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது" என்று பதற்றத்துடன் தெரிவித்துள்ளார். இதனிடையே, நிவாரணப் பொருள்களுடன் 20 லாரிகள் எல்லையில் காத்திருக்கும் நிலையில், எகிப்து ராஃபா சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்றைக்குள் காசாவுக்குள் லாரிகள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த 7-ம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி கொடுக்க, இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வரும் காசா நகரை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. இதனால் நகருக்குள் குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள்கள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனிடையே, காசாவாசிகள் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலுக்கு மத்தியில் மற்றொரு இரவைக் கடந்துள்ளனர். ராஃபா எல்லை இன்னும் சீரமைக்கப்படாததால் நிவாரணப் பொருள்கள் எப்போது வரும் என்ற நிச்சயமற்ற நிலையில் காசாவாசிகள் உள்ளனர்.

காசா பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில் தஞ்சம் புகுந்த பல இடம்பெயர்ந்த மக்கள், இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் (Greek Orthodox church) வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நரகத்தின் வாயிலாக காசா: கடந்த சில வாரங்களாக நரகத்தின் வாயிலாக காசா மாறியுள்ளது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியைச் சேர்ந்த ஜூலியடே டோமா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "முற்றுகையிடப்பட்டுள்ள காசாவாசிகளுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. நீண்ட இரண்டு வாரங்களாக காசாவாசிகளுக்கு எந்த ஒரு நிவாரண பொருள்களும் கொடுக்க முடியவில்லை. கடிகாரம் சுழன்று கொண்டே இருக்கிறது. ராஃபா எல்லை சாலை எப்போது சீராகும் என்று தெரிவியவில்லை” என்றார். தொடர்ந்து நிவாரண பொருள்கள் ஹமாஸ்கள் வசம் சிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோது, "UNRWA கடுமையான கண்காணிப்பும் பாதுகாப்பையும் கொண்டுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த 13,000 ஊழியர்கள் உதவி தேவைப்படுவோருக்கு நேரடியாக சென்று பொருள்களை அளிப்பார்கள். நாங்கள் பல தசாப்தங்களாக இதனைச் செய்துவருகிறோம்" என்றார்.

இதனிடையே, தீவிரம் அடைந்து வரும் இந்த மோதல் பிற அரபு நாடுகளுக்கு பரவி விடக்கூடாது என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்தப் பின்னணியில் இங்கிலாந்து பிரதமர் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துகிறார். முன்னதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வியாழக்கிழமை இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு சென்றார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனாக், “சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இங்கிலாந்து வழங்கும். ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகள்விடுவிக்கப்பட வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் இஸ்ரேலின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இருள் சூழ்ந்த இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து ஆதரவாக இருக்கும்" என்றார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் இருந்து தேச மக்களுக்கு வெள்ளிக்கிழமை உரையாற்ற அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், "ஹமாஸ் மற்றும் புதினின் தீவிரவாதமும், கொடுங்கோன்மையும் வெவ்வேறு அச்சுறுத்தல்களைக் கொண்டவை. ஆனால், இரண்டுக்குமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழித்தொழிப்பதே இலக்கு. இதுபோன்ற சர்வதேச ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் அதனால் ஏற்படும் மோதல்களும், குழப்பங்களும் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். இதனால் பாதிப்புகள் அதிகமாகும். ஆகையால், இந்தச் சூழலில் இத்தகையப் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் பெருமளவில் நிதியுதவி அளிக்க வேண்டும். அதற்காக நான் வலியுறுத்துவேன். இந்த நிதியுதவி அமெரிக்காவின் எதிர்கால நலனுக்கான முதலீடு என்பதைப் புரியவைப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அக்.7-ம் தேதி நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, காசாவில் இதுவரை 3,700-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலில் 1,400-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x