Published : 20 Oct 2023 05:34 AM
Last Updated : 20 Oct 2023 05:34 AM

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பு

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஜெருசலேமில் நேற்று சந்தித்து பேசினார்.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் உள்ளிட்டோர் இஸ்ரேலுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்த வரிசையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு சென்றார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது நெதன்யாகு கூறும்போது, “இது மிகப்பெரிய, நீண்ட நாட்கள் நீடிக்கும் போர். இந்த போரில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து முழுஆதரவு அளிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசியதாவது:

சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இங்கிலாந்து வழங்கும். ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகள்விடுவிக்கப்பட வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் இஸ்ரேலின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனினும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இஸ்ரேல் ராணுவம் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறது. இருள் சூழ்ந்த இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து ஆதரவாக இருக்கும். இவ்வாறு ரிஷி சுனக் பேசினார்.

3,000 டன் நிவாரண பொருட்கள்: சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, சீனா, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் காசா மக்களுக்கு உதவுவதற்காக சுமார் 3,000 டன் நிவாரண பொருட்கள், மருந்துகளை எகிப்துக்கு விமானங்களில் அனுப்பி வைத்துள்ளன. இவை சுமார் 200 லாரிகளில் ஏற்றப்பட்டு எகிப்து-காசா எல்லைப் பகுதியான ரஃபாவில் நிறுத்தப்பட்டு உள்ளன. ரஃபா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதல்களால் நிவாரண பொருட்களை காசாவுக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் எகிப்து அதிபர் அப்தெல்ஃபத்தா அல் சிசி உடன் தொலைபேசியில் அவர் ஆலோசனை நடத்தினர். அதிபர் பைடனின் சமரச முயற்சியால் காசா பகுதிக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல், எகிப்து இடையே உடன்பாடு எட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து இஸ்ரேல் போர் விமான குண்டுவீச்சால் ரஃபா பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை எகிப்து அரசு நேற்று போர்க்கால அடிப்படையில் சீரமைத்தது. முதல்கட்டமாக ரஃபா எல்லை வழியாக காசா பகுதிக்கு இன்று 20 லாரிகளில் நிவாரண பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸுடன் தொலைபேசியில் பேசினேன். காசாவின் அல் ஆஹ்லி மருத்துவமனையில் பொதுமக்கள் உயிரிழந்தது தொடர்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். இந்தியா சார்பில் பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்குவோம் என உறுதி அளித்தேன். பாலஸ்தீன பகுதியில் நீடிக்கும் தீவிரவாதம், வன்முறை, பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து இருவரும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது
என்பதை எடுத்துரைத்தேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x