Published : 19 Oct 2023 04:14 PM
Last Updated : 19 Oct 2023 04:14 PM
டெல் அவிவ்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் வலுத்துவரும் சூழலில், உலகெங்கிலும் இந்தப் போருக்கு எதிரான குரல்களும் வலுத்து வருகின்றன. அவை ஒருபுறம் இருக்க, உள்நாட்டிலேயே போருக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இச்சூழலில்தான் இஸ்ரேல் காவல் துறை தலைவர் கோபி ஷபாதி ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை. அவ்வாறாக போர் எதிர்ப்புக் குரல் உயர்த்துபவர்கள் அனைவரும் காசாவுக்கு பேருந்தில் அனுப்பிவைக்கப்படுவர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் காவல் துறையின் டிக்டாக் சேனலில் காவல் துறை தலைவர் கோபி ஷபாதி இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனை இஸ்ரேல் ஊடகங்கள் செய்தியாக்கியுள்ளன. முன்னதாக, நேற்று காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலின் ஹைஃபா நகரில் ஒரு பேரணி நடந்தது. அந்தப் பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். கூடவே 6 பேரை கைதும் செய்தனர். இதனையடுத்தே இஸ்ரேல் ஊடகங்கள் காவல்துறை தலைவரின் வீடியோ குறித்த செய்தியாக்கியுள்ளன.
இஸ்ரேல் காவல் துறை தலைவர் தனது வீடியோவில், "இஸ்ரேல் நாட்டு குடிமக்களாக வேண்டும் என்று யார் விரும்பினாலும் வரவேற்கிறேன். காசாவுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் வரவேற்கிறேன். அவர்களை காசா செல்லும் பேருந்தில் ஏற்றிவிடுகிறேன். காசா ஆதரவுப் போராட்டங்களைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது. வன்முறையைத் தூண்டுவதை அனுமதிக்க முடியாது. இஸ்ரேல் இப்போது போர் நிலையில் இருக்கிறது. இப்போது யாரும் வந்து எங்களை சோதித்தால், அதைப் பொறுக்கும் சூழலில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் போராட்டம் - 300 பேர் கைது: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கேனன் ரவுண்டானாவில் புதன்கிழமை திரண்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காசா போரை உடனே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார் 300 பேரை கைது செய்தனர்.
பைடன், ரிஷி... இஸ்ரேலில் உலகத் தலைவர்கள்: ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் உள்ளன. ஹமாஸ் அளிக்கப்பட வேண்டும்/ ஆனால், பாலஸ்தீன மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். இன்று (வியாழக்கிழமை) இஸ்ரேல் வந்தடைந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேலுடன் இந்தப் போரில் துணை நிற்பதாகக் கூறியுள்ளார்.
தாக்குதலில் வட கொரிய ஏவுகணை? - இதற்கிடையில், காசா பகுதியில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் காரணமில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஆட்ரின் வாட்சன் தெரிவித்துள்ளார். அதுபோல், இந்தத் தாக்குதலில் ஹமாஸ் வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஏவுகணைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற தகவலை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,400 பேரும், காசா பகுதியில் 3,300-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT