Published : 18 Oct 2023 06:47 PM
Last Updated : 18 Oct 2023 06:47 PM

காசா மருத்துவமனை தாக்குதல்: இஸ்ரேல் குற்றம்சாட்டும் ‘பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்’ குழுவின் பின்னணி

காசா மருத்துவமனை மீதான தாக்குதல்

காசா: காசாவின் அல்-அஹ்லி மருத்துவமனை மீதான ஏவுகணைத் தாக்குதலில் 500 பேர் பலியாகியிருப்பது உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என ஹமாஸ், பாலஸ்தீன அதிகாரிகள் குற்றம்சாட்ட, அதை திட்டவட்டமாக மறுக்கும் இஸ்ரேல், இந்தத் தாக்குதலுக்கு ‘பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்’ குழு தான் முழு காரணம் எனக் குற்றம் சுமத்தியுள்ளது. பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியுற்று தவறுதலாக காசாவின் அல்-அஹ்லி மருத்துவமனை மீது தாக்கியுள்ளது எனக் கூறியுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை, தாக்குதலுக்கு முன்பும், பின்பும் மருத்துவமனையின் காட்சிகள் என்று கூறி ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் யார்? - இஸ்ரேல் குறிப்பிடும் இஸ்லாமிய ஜிஹாத், அதிகாரபூர்வமாக பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சன்னி பிரிவு இஸ்லாமியக் குழு. இதை நிறுவியவர்கள் ஃபாத்தி ஷாககி மற்றும் அப்துல் அஜிஸ் அவ்தா என்பவர்கள். இவர்கள், எகிப்தில் 1928-ல் ஹசன் அல்-பன்னாவால் நிறுவப்பட்ட சன்னி பிரிவு இஸ்லாமிய சமூக இயக்கத்தின் மாணவர்கள். ஈரானியப் புரட்சியில் இருந்து உத்வேகம் பெற்ற இருவரும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை எதிர்க்கவும், ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசை நிறுவவும் ஒரே வழி இஸ்ரேலை அழித்தொழிப்பது என்ற ஒற்றை நோக்கத்துடன் ஷாககி, அவ்தா இருவரும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் என்ற அமைப்பை எகிப்தில் தோற்றுவித்தனர். ஆனால், 1981-ல் எகிப்து அரசு, இந்த இஸ்லாமிய ஜிஹாத்தைச் சேர்ந்தவர்களை நாடு கடத்தியது.

ஹமாஸ், ஃபத்தா, ஹிஸ்புல்லா போன்ற பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் சமூக மற்றும் அரசியல் அதிகாரங்களை பெறுதலை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன. ஆனால், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்தின் நோக்கமும் செயலும் ஒன்றே. அது, இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்பதே. ஹமாஸ் அமைப்புக்கு பிறகு பாலஸ்தீனத்தில் செயல்படும் இரண்டாவது பெரிய ஆயுதக் குழு இந்த இஸ்லாமிய ஜிஹாத்தே. காசா மற்றும் மேற்குக் கரை ஆகிய இரண்டு பகுதிகளிலும் இக்குழுவுக்கு இருப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இக்குழு முதன்முதலில் இஸ்ரேல் ராணுவ கேப்டன் ஒருவரை கொலை செய்தது. பாலஸ்தீனிய புரட்சியின் சமயத்தில் நடந்த இந்தத் தாக்குதலுக்குப் பின் காசாவில் இருந்து லெபனானுக்கு நாடு கடத்தப்பட்டது ஒட்டுமொத்த இஸ்லாமிய ஜிஹாத்தும். அங்கு ஹிஸ்புல்லா அமைப்புடன் வலுவான உறவு ஏற்பட இஸ்லாமிய ஜிஹாத்தே முற்றிலும் மாறிப்போனது. ஹிஸ்புல்லா உடன் இணைந்து ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்ட அதன் ஜிஹாதிகள் அதன்பின் மூர்க்கமாக செயல்படத் தொடங்கினர். அல்-குத்ஸ் பிரிகேட்ஸ் என அழைக்கப்படும் இதன் ராணுவப் பிரிவு 1990-களில் இருந்து இஸ்ரேல் மீது பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

ஹமாஸ் உடனான உறவு: ஹமாஸ், அரசியல் ரீதியாக மக்களை ஒன்றிணைந்து போராட விரும்பிய இயக்கம். அதில் சிலசமயம் வெற்றியும் பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஹமாஸ் அரசியல் அங்கீகாரம் பெற்றுவருகிறது. காசாவில் 2006 தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால், இஸ்லாமிய ஜிஹாத்தை பொறுத்தவரை ஆயுத தாக்குதலே சரியான நடவடிக்கை சொல்லும் இயக்கம். இவர்களுக்கு அரசியல் விடுதலை, பேச்சுவார்த்தை என்பதில் எல்லாம் உடன்பாடு கிடையாது. இதற்குமுன் பாலஸ்தீனம், இஸ்ரேல் உடன் செய்துகொண்ட சமாதான உடன்படிக்கைகளை விமர்சித்தும் இருக்கிறது.

"இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலைத் தீர்க்க அரசியல் பேச்சுவார்த்தைகளின் மீது நம்பிக்கை கிடையாது. சமாதான உடன்படிக்கைகள் காசாவில் நிகழும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு அல்ல" எனப் பல முறை வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஹமாஸ் - இஸ்லாமிய ஜிஹாத் ஆகிய இரு குழுக்களிடையே பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால், அது இஸ்ரேலை எதிர்ப்பதுதான். மற்றபடி, சித்தாந்தம் உள்ளிட்டவற்றில் வேறுபட்டே செயல்படுகின்றன. அதேநேரத்தில், இந்த இஸ்லாமிய ஜிஹாத்தை ஹமாஸ் எச்சரித்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. ஹமாஸ் கூட சில சமயங்களில் இஸ்ரேல் உடனான ஆயுத மோதலில் பின்வாங்கியிருந்தாலும், இஸ்லாமிய ஜிஹாத் இஸ்ரேல் உடன் மோதுவதில் எப்போதும் முதலிடம் வகிக்கிறது.

இந்த பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்தை 1997-ல் பயங்கரவாத அமைப்பு என அமெரிக்காஅறிவித்தது. மேலும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்று இஸ்லாமிய ஜிஹாத்துக்கும் ஈரான் நிதியுதவி அளிக்கிறது என்பது அமெரிக்காவின் முக்கியக் குற்றச்சாட்டுகளில் ஒன்று. இப்படியான நிலையில்தான் நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரை காட்சியில் வெளிவராத இந்த பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் இப்போது இஸ்ரேல் குற்றச்சாட்டால் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் கூறும்போது, “காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல; வேறு ஏதேனும் குழு தாக்குதல் நடத்தியிருக்கலாம்” என்றது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x