Published : 18 Oct 2023 10:14 AM
Last Updated : 18 Oct 2023 10:14 AM

காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேர் படுகொலை - இஸ்ரேல் மறுப்பு

காசா: காசா நகரத்தில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதலை தாங்கள் நிகழ்த்தவில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கடந்த 7ம் தேதி தொடங்கிய காசா - இஸ்ரேல் மோதல், தற்போது 12வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்துவிட்டதாக காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த வான் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என காசா குற்றம் சாட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இஸ்லாமிய ஜிகாத் அமைப்பே இதற்குக் காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வருகை தர உள்ள நிலையில், இந்த தாக்குதல் காசா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகளும், ஐநாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் - காசா இடையே உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அரபு நாடுகளும், ஐநாவும் வலியுறுத்தியுள்ளன.

ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "காசாவில் உள்ள மருத்துவமனை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். சர்வதேச மனிதாபிமான சட்டப்படி மருத்துவமனைகளும், மருத்துவ பணியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனை மீதான தாக்குதலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ள நிலையில், அவர் பொய் சொல்கிறார் என்று ஐநாவுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள் பேட்டியில், "அவர் ஒரு பொய்யர். மருத்துவமனையை சுற்றி ஹமாஸ் அமைப்பின் செயல்பாடு இருப்பதாகக் கருதி இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக இஸ்ரேல் டிஜிட்டல் செய்தித் தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அவர் தனது பதிவை நீக்கிவிட்டார். ஆனாலும், அதன் நகல் எங்களிடம் உள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம். பொய் கதைகளை அவர்கள் புனைவதை ஏற்க முடியாது" என தெரிவித்துள்ளார். நேற்றைய நிலவரப்படி இஸ்ரேலின் தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; சுமார் 200 பேர் பிணைய கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x