Published : 18 Oct 2023 04:51 AM
Last Updated : 18 Oct 2023 04:51 AM
வாஷிங்டன்: பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாகி வருகிறது. இந்த சூழலில் இன்று இஸ்ரேலுக்கு செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
இஸ்ரேல் ராணுவம் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் நேற்று 11-வது நாளாக நீடித்தது. பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள கான் யூனிஸ், ரஃபா உட்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தீவிர தாக்குதல்நடத்தின. இஸ்ரேலில் இருந்து ஏராளமானஏவுகணை குண்டுகளும் வீசப்பட்டன. இதில் 80-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்தனர். 1,200-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பலரின் கூக்குரல் கேட்கிறது. ஆனால் மீட்க முடியவில்லை என்று தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவ மூத்த தளபதி மைக்கேல் தற்போது இஸ்ரேலில் முகாமிட்டுள்ளார். அமெரிக்காவின் முப்படைகளை சேர்ந்த 2,000 வீரர்கள் விரைவில் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட உள்ளனர். இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள். ஆனால் இஸ்ரேல் ராணுவத்துக்கு தேவையான ஆலோசனைகள், உதவிகளை வழங்குவார்கள்’’ என்று தெரிவித்தன.
இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட், டெல் அவிவ் நகரில் நேற்று கூறும்போது, “ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான போர் தீவிரமடைந்து வருகிறது. தற்போது அடுத்தகட்ட போருக்கு தயாராகி வருகிறோம். இது தரைவழி தாக்குதல் என்று எல்லோரும் கூறி வருகின்றனர். ஆனால் இது வேறு மாதிரியான போராக இருக்கும்’’ என்றார்.
உலக தலைவர்கள் வருகை: போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் செல்கிறார். அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து, போர் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இஸ்ரேலில் 5 மணி நேரம் தங்கியிருக்கும் அதிபர் பைடன் அங்கிருந்து ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு செல்கிறார். அங்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்சிசி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ்ஆகியோருடன் பைடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
ருமேனியா பிரதமர் மார்சல், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் நேற்று இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு சென்றனர். அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இருவரும் தனித்தனியாக சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஐ.நா. சபையில் தீர்மானம் தோல்வி: காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ரஷ்யா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், மொசாம்பிக், காபோன் ஆகிய 5 நாடுகள் ஆதரவு அளித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. போதிய வாக்குகள் கிடைக்காததால் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்விஅடைந்தது.
புதின் - நெதன்யாகு பேச்சு: இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2 நாட்கள் பயணமாக நேற்று சீன தலைநகர் பெய்ஜிங் சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இருவரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ரஷ்யஅதிபர் புதின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது காசா மீதான தாக்குதலை நிறுத்த அவர் வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் ஏற்கவில்லை.
ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கொமேனி கூறும்போது, “காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது’’ என்றார்.
கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள், ஏராளமான இஸ்ரேலியர்களை காசா பகுதிக்கு கடத்திச் சென்றனர். இந்த சூழலில் மியாஎன்ற பிணைக் கைதியின் வீடியோவை ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று வெளியிட்டனர். மியாவின் வலது கையில்காயம் ஏற்பட்டிருப்பதும் அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதும் வீடியோவில் காட்டப்படுகிறது. “எங்களிடம் 200 முதல் 250 பிணைக்கைதிகள் உள்ளனர்’’ என்று ஹமாஸ் செய்தி தொடர்பாளர் அபு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT