Published : 24 Jan 2018 05:23 PM
Last Updated : 24 Jan 2018 05:23 PM
கிழக்கு லிபியாவின் பெங்காசி நகரில் மசூதி முன்பு அடுத்தடுத்து 2 கார் வெடிகுண்டுகள் வெடித்து சிதறிய சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
பெங்காசி நகரின் மத்தியில் அல்-ஸ்லேமானி என்ற பகுதி உள்ளது. இங்குள்ள மசூதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு 8.20 மணியளவில் முஸ்லிம்கள் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு வெடிபொருள் நிரப்பிய கார் ஒன்று வெடித்து சிதறியது. இதையடுத்து உள்ளூர் மக்களும் மீட்பு மற்றும் மருத்துவக் குழுவினரும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அங்கு அடுத்த அரை மணி நேரத்தில் மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்து சிதறியது.
இவ்விரு தாக்குதல்களிலும் 34 பேர் இறந்தனர், 87 பேர் காயம் அடைந்தனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித் தன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லை.
இந்த தாக்குதலை ஐ.நா. கண்டித்துள்ளது. “அப்பாவி மக்கள் மீது நேரடியாகவும் கண்மூடித்தனமாகவும் தாக்குதல் நடத்துவது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போர் குற்றமாகும்” என்று ஐ.நா. கூறியுள்ளது.
லிபியாவில் 2011-ல் அதிபர் கடாபி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, கொல்லப்பட்ட பிறகு உள்நாட்டு குழப்பம் நிலவுகிறது. அங்கு 2 போட்டி அரசுகளும் பல்வேறு தீவிரவாத குழுக்களும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்று வருகின்றன. இதில் லிபியாவின் கிழக்குப் பகுதியில் ராணுவ அதிகாரி காலிபா ஹப்தர் ஆதரவு அரசு அமைந்துள்ளது. அங்கு சலாபி முஸ்லிம்கள் ஹப்தர் படையுடன் சேர்ந்து ஜிகாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இந் நிலையில் சலாபி முஸ்லிம்களை குறிவைத்து பெங்காசி நகரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT