Published : 17 Oct 2023 03:29 PM
Last Updated : 17 Oct 2023 03:29 PM

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கோரி ரஷ்யா முன்மொழிந்த தீர்மானம் - ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிராகரிப்பு

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ரஷ்ய தூதர்.

நியூயார்க்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட ரஷ்யா முன்மொழிந்த தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் உள்பட மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு கொண்டு வரப்படும் ஒரு தீர்மானம் நிறைவேற 9 நாடுகளின் ஆதரவு தேவை. இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக சீனா, கபோன், மொசாம்பிக், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த தீர்மானத்துக்கு எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் எதிராக வாக்களித்தன. அல்பேனியா, பிரேசில், ஈக்வடார், கானா, மால்டா, ஸ்விட்சர்லாந்து ஆகிய 6 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதனால், இந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தது.

முன்னதாக, இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய ஐநாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ், "இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் தொடர்பாக ரஷ்ய தீர்மானத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இதனை ஆதரிக்க முடியாது. ஹமாஸ் அமைப்பின் செயலை கண்டிக்காததன் மூலம் அத்தகைய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அப்பாவி மக்களை கொன்றுள்ளது, கடத்திச் சென்றுள்ளது. இதில், அமெரிக்கக் குடும்பங்களும் உள்ளன. காசா மக்கள் தற்போது சந்தித்து வரும் துயரங்களுக்குக் காரணம் ஹமாஸ்தான். இஸ்ரேலை குற்றம்சாட்டக்கூடியதாகவும், பல பத்தாண்டுகளாக இஸ்ரேல் மீது தீராத வஞ்சம் கொண்டிருக்கும் ஹமாஸை மன்னிப்பதாகவும் உள்ள இந்த தீர்மானம் நியாயமானது கிடையாது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இதுபோன்ற ஒரு தவறு நிகழ்வதை அனுமதிக்க முடியாது" என குறிப்பிட்டார்.

இதேபோல், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தூதர்களும் ரஷ்ய தீர்மானத்துக்கு எதிராக தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இதனை அடுத்துப் பேசிய ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன், "ஐநா பாதுகாப்பு கவுன்சில் மிக முக்கிய தருணத்தில் உள்ளது. இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை ஹமாஸ் நடத்தி உள்ளது. தற்போது தனது பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் இஸ்ரேல் உள்ளது. காசாவில் மக்களுக்கு என்ன நேர்கிறதோ அதற்கு ஹமாஸ்தான் காரணம். அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ஐநா பாதுகாப்பு அவை அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

ஐநாவுக்கான ரஷ்ய தூதர் வாசிலி நெபென்சியா பேசும்போது, "போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்கப்படாதது வருத்தமளிக்கிறது. மேற்கத்திய நாடுகளின் சுயநலமே இதற்குக் காரணம். வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலகின் நம்பிக்கையாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் உள்ளது. ஆனால், அந்த நம்பிக்கையை மேற்கத்திய நாடுகள் தங்கள் சுயநலனுக்காக காலில் போட்டு மிதித்துள்ளன. முழுக்க முழுக்க சுயநலத்துடனும், தங்களுக்கான அரசியல் நோக்களுடனேயே மேற்கத்திய நாடுகள் செயல்படும் என்ற செய்தியை இது வெளிப்படுத்தி உள்ளது" என குற்றம்சாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x