Published : 16 Oct 2023 09:20 PM
Last Updated : 16 Oct 2023 09:20 PM

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் 2,808 பேர் பலி - 24 மணி நேரத்துக்கு மட்டுமே நீர் இருப்பு!

காசா: காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 2,808 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,859 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 254 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 64 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். அதேபோல டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் உட்பட 37 மருத்துவ ஊழியர்கள் இறந்துள்ளனர்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெருசலேம் நோக்கி ஹமாஸ் தாக்குதல்: ஜெருசலேம் நகரில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்ட நிலையில், ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் நோக்கி ஏவுகணைகளை வீசியதாக ஹமாஸின் ஆயுதப் படை அறிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேலிய பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதுக்கு பதிலடியாக டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நோக்கி ஏவுகணைகளை வீசிவருவதாக ஹமாஸ் தீவிரவாதக் குழு தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்துக்கு மட்டுமே நீர் இருப்பு: காசாவுக்கான உணவு, மின்சாரம், குடி தண்ணீர் என அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ள நிலையில், அங்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு மட்டுமே நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகியவை இருப்பு உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.நா சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர்களில் ஒருவரான அஹ்மத் அல்-மந்தாரி, "ரஃபா எல்லையில் சிக்கியுள்ள உதவிப் பொருட்களை அனுமதிக்க வேண்டும். அந்த உதவிப் பொருட்கள் வரவில்லை என்றால் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இறப்புச் சான்றிதழைத் தயார் செய்ய வேண்டும்" என்று வேதனைப்பட கூறியுள்ளார்.

ஈரானுக்கு நெதன்யாகு எச்சரிக்கை: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை (அக்.16) பேசிய அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "ஹமாஸை தோற்கடிக்க உலகம் ஒன்றுபட வேண்டும். இந்தப் போர் எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குமான போரும் கூட. இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோம். ஏனெனில் இது இந்த பிராந்தியத்தில் எங்களின் இருப்பைப் பற்றியது. ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதத்தின் ஒரு பகுதிதான் ஹமாஸ். இவர்கள் மத்திய கிழக்கு பகுதிகளை படுகுழியில் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

இப்போது, இஸ்ரேல் யாரை எதிர்கொள்கிறது என்பதை உலகெங்கிலும் உள்ள பலர் புரிந்துகொண்டிருப்பார்கள். ஹமாஸ் நாஜிக்களின் புதிய வெர்ஷன். நாஜிக்கள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ்ஸை தோற்கடிக்க உலகம் ஒன்றுபட்டது போல, ஹமாஸை தோற்கடிக்கவும் ஒன்றுபட வேண்டும். ஈரானும், ஹிஸ்புல்லாவும் எங்களை சோதனை செய்து பார்க்க வேண்டாம். அப்படி செய்தால் இந்த முறை நீங்கள் செலுத்தும் விலை மிக அதிகமாக இருக்கும்" என எச்சரித்துள்ளார்.

பிணைக் கைதிகளின் குடும்பங்கள் தடுத்து நிறுத்தம்: அக்டோபர் 7-ல் தெற்கு இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலின்போது பிணைக் கைதிகளாக 199 இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் குழு கடத்திச் சென்றனர். அவர்களை விடுவிக்க நிபந்தனைகளை விதித்து வருகிறது அக்குழு. இதனிடையே, பிணைக் கைதிகளின் குடும்பங்கள் காசா பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், "காசாவில் பிணைக் கைதிகள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து ராணுவத்திடம் சில தகவல்கள் இருக்கிறது. அவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அங்கு தாக்குதல் நடத்தப்படாது" என இஸ்ரேல் பாதுகாப்பு படை செய்தி தொடர்பாக டேனியல் ஹகாரி கூறியிருக்கிறார்.

முன்னதாக இன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "பிணைக் கைதிகளை மீட்க இடைவிடாமல் முயற்சித்து வருகிறோம்" என கூறியிருக்கிறார்.

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். யாரும் எதிர்பாராத அந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலை மிகக் கடுமையான பதில் தாக்குதலை நடத்திவருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளுடனான இஸ்ரேல் போர் 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீனர்களும் வடக்கிலிருந்து வெளியேற இஸ்ரேல் தொடர்ந்து கூறிவந்தது. இந்நிலையில் கார்கள், ட்ரக்குகள், கழுதை வண்டிகள் என மக்கள் சாரைசாரையாக நகரின் தெற்கு நோக்கி நகர்கின்றனர்.

இது குறித்து ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்பான OCHA வெளியிட்டுள்ள அண்மை அறிக்கையில், இஸ்ரேல் எச்சரிக்கையால் காசாவில் பெருமளவில் மக்கள் இடம் பெயர்தல் நடக்கிறது. வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று வரை லட்சக்கணக்கானோர் காசாவுக்குள்ளேயே ஓரிடம்விட்டு இன்னொரு இடத்துக்குப் பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளுடனான இஸ்ரேல் போர் 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேவேளையில், காசாவில் பதற்றத்தை தணிக்க எந்த நிபந்தனையுமின்றி இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுக்கு ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேபோல், காசாவில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தவிக்கும் சூழலில், அரபு நாடுகளான கத்தார், ஜோர்டான், லெபனான், எகிப்து ஏன் எல்லைகளை மூடிவைத்திருக்கின்றன என்று அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் நிக்கி ஹாலே கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்புலம்: கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்குபகுதியில் தரை, கடல், வான் வழியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 2,300 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இதில் இதுவரை 2,808 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரு தரப்புக்கும் இடையே இன்று 10-வது நாளாக போர் நீடித்துள்ளது.

இதனிடையே, பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்த தயாராகி வருகின்றன. இதற்காக காசா முனை எல்லை பகுதியில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள் தயார் நிலையில் உள்ளன. சுமார் 10,000 வீரர்கள் ஏற்கெனவே காசா எல்லை பகுதிக்குள் நுழைந்துவிட்டனர். ராணுவ தலைமையிடம் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் தாக்குதல் தொடங்கும். இஸ்ரேல் ராணுவம், விமானப் படை, கடற்படை தயார் நிலையில் உள்ளன. வடக்கு காசாபகுதியில் ஒரே நேரத்தில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்தும்போது, ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை குண்டு தாக்குதலை தீவிரப்படுத்தக் கூடும் என்று தெரிகிறது. இதனால், காசாவை ஒட்டிய இஸ்ரேலின் தெற்கு பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை குறிவைத்தும் ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால், இஸ்ரேல் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x