Published : 16 Oct 2023 11:28 AM
Last Updated : 16 Oct 2023 11:28 AM
நியூயார்க்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் 10வது நாளை எட்டியுள்ள நிலையில் பதற்றத்தை தணிக்க எந்த நிபந்தனையுமின்றி இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுக்கு ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐ.நா. தலைவர் அண்டோனியோ குத்ரேஸ் இது குறித்து, "ஹமாஸ் அமைப்பினர் எந்த வித நிபந்தனையுமின்றி பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதேபோல் இஸ்ரேல் மனிதாபிமான உதவிகள் காசா சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். மத்திய கிழக்கில் நிலவும் அபாயமான சூழலில் ஐ.நா தலைவராக நான் இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன்வைக்க வேண்டிய கடமை உள்ளது. அதன்படி கோருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பல்வேறு நாடுகளும் அனுப்பிய உதவிகள் எகிப்தில் சினாய் தீபகற்பத்தில் தேங்கியுள்ளது. ரஃபா எல்லை வழியாக காசாவிலிருந்து வெளிநாட்டவர் வெளியேறுவதிலும் கெடுபிடிகள் நிலவுகின்றன.
இஸ்ரேலின் தொடர் அறிவுறுத்தலால் காசாவின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பல லட்சம் பேர் இடம் பெயர்ந்துவிட்டனர். மருத்துவமனைகளில் கூட எரிபொருள் இல்லாத சூழலலே காசாவில் நிலவுகிறது. இன்னும் 24 மணி நேரத்தில் மருத்துவமனைகள் கூட இருளில் மூழ்கும். ஆயிரக்கணக்கான நோயாளிகள் உரிய சிகிச்சை கிட்டாமல் உயிரிழக்க நேரிடும் என ஐ.நா மனிதாபிமான உதவிகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் ஐ.நா. தலைவர் அண்டோனியா குத்ரேஸ் இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT