Published : 15 Oct 2023 01:35 PM
Last Updated : 15 Oct 2023 01:35 PM
காசா நகர்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் 9-வது நாளை எட்டியுள்ள நிலையில் காசாவில் இதுவரை 2,329 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஹமாஸ் அமைப்பினர் மூவர் கொல்லப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
'இனிமேல் தான் இருக்கு' இதற்கிடையில் காசாவில் வான், கடல், தரைவழி என மூன்று முனைத் தாக்குதலை நடத்தப்போவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) அறிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவ அறிக்கை வெளியாகியுள்ளது. முன்னதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா எல்லையில் ராணுவ வீரர்களை சந்தித்தார். பின்னர் அளித்தப் பேட்டியில், 'இனிமேல் தான் நிறைய நடக்கவுள்ளது' என்று கூறினார். அதனைத் தொடர்ந்து இத்தகைய அறிக்கையை ராணுவம் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் கமாண்டர் கொலை: காசாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் படையின் நக்பா பிரிவின் தலைவர் பிலால் அல் கத்ரா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. காசாவிலிருந்து வெளியேற மக்கள் விரும்பினாலும்கூட ஹமாஸ் படையினர் அவர்களை தடுத்து நிறுத்துவதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
சீன தூதர் கண்டனம்: "காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தற்காப்பு என்பதையும் தாண்டி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்புகளும் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும்" என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளார்..பாலஸ்தீனப் பிரச்சினையில் ஐ.நா. தலையிட்டு சுமுகத் தீர்வு ஏற்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள்: வடக்கு காசா பகுதியில் உள்ளமருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டனர். அவர்களின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு, செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
வடக்கு காசா பகுதியில் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெறுவோருக்கு மனிதாபிமான அடிப்படையில் எகிப்து மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம். அவர்களை எகிப்து எல்லைப் பகுதிக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வரலாம் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT