Published : 14 Oct 2023 04:16 AM
Last Updated : 14 Oct 2023 04:16 AM
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இதன்காரணமாக காசாவின் வடக்கு பகுதியில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்றுஇஸ்ரேல் ராணுவம் கெடு விடுத்துள்ளது.
கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசினர். 1,200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தரை, வான்,கடல் வழியாக இஸ்ரேலின் தென் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இதுவரை 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். 3,300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏராளமான இஸ்ரேலியர்களை, ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்து சென்றனர்.
காசாவை நோக்கி 300 பீரங்கிகள்: இதற்கு பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் போர்தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே 7-வது நாளாக நேற்று கடுமையான சண்டை நடந்தது. இஸ்ரேலிய பிணைக் கைதிகளை மீட்கவும் ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கவும் காசா பகுதிக்குள் தரைவழியாக நுழைய இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவத்தின் ஒரு லட்சம் வீரர்கள் தயாராக உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. 300 பீரங்கிகள் காசா பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றன.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் சுமார் 23 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் காசாவின் வடக்கு பகுதியில் மட்டும் சுமார் 11 லட்சம் பேர் வசிக்கின்றனர். வடக்கு பகுதியில்தான் தரைவழியாக நுழைய இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெற்கு பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேலிய போர்விமானங்கள், ட்ரோன்கள் மூலம் காசாவின் வடக்கு பகுதியில் நேற்று துண்டுபிரசுரங்கள் வீசப்பட்டன. அதில், ‘காசாமக்களை மனித கேடயமாக ஹமாஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். போரில் அப்பாவி மக்கள்பாதிக்கப்பட கூடாது. எனவே,காசாவின் வடக்கு பகுதியில்வசிப்பவர்கள், தெற்கு பகுதியில் உள்ள பாதுகாப்பானஇடங்களுக்கு செல்லுமாறுஅறிவுறுத்துகிறோம். ராணுவநடவடிக்கை முடிந்த பிறகு மீண்டும் வீடுகளுக்கு திரும்பலாம்’ என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈரான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் அச்சம் பரவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT