Last Updated : 13 Oct, 2023 10:08 PM

6  

Published : 13 Oct 2023 10:08 PM
Last Updated : 13 Oct 2023 10:08 PM

11 லட்சம் மக்களை வெளியேறுமாறு ‘மிரட்டும்’ இஸ்ரேல் - எங்கே செல்வார்கள் காசா மக்கள்?

காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள 1.1 மில்லியன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படாவிட்டால் தரைவழித் தாக்குதலில் மோசமாக பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என ஹமாஸ் இயக்கத்துக்கு இஸ்ரேல் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையை ஹமாஸ் நிராகரித்தது ஒருபுறம் இருக்க, ஐ.நா. மூலம் இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை ஐ.நா அமைப்பே கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், "இத்தகைய செயல் பேரழிவை ஏற்படுத்தும். பேரழிவு தரும் விளைவுகள் இல்லாமல் அத்தகைய இடம்பெயர்வு நடைபெறுவது சாத்தியமில்லை" என ஐ.நா தனது அதிருப்தியை பதிவு செய்தது.

இஸ்ரேல் ராணுவம் விதித்துள்ள 24 மணி நேர கெடுவுக்குள் தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களை வெளியேற்றுவது என்பது இயலாத காரியம் என மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் காரணமாக பலத்த காயமடைந்துள்ள பலருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அது அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையாக இருந்து வருகிறது. அப்படிப்பட்டவர்களை வெளியேற்றுவது என்பது அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு இணையானது. அத்தகையவர்களை வெளியேற்ற சுகாதாரப் பணியாளர்களிடம் கேட்பது மிக மோசமான கொடுமை. லட்சக்கணக்கானோரை வெளியேறச் சொல்வது இயலாத காரியம். அது மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்” என உலக சுகாதார நிறுவனமும் தனது பங்குக்கு வேதனையை வெளிப்படுத்த தவறவில்லை.

ஐ.நா மட்டுமல்ல, மனிதாபிமான உதவிகளை செய்யும் உலகளாவிய நிறுவனங்களும் வெளிப்படுத்தும் கவலையும் இதுவே. 1.1 மில்லியன், அதாவது 11 லட்சத்துக்கும் அதிகமான மக்களை 24 மணி நேரத்தில் எப்படி வெளியேற்றுவது என்பதுவே அது. அதைவிட மிக முக்கியமான கேள்வி அவர்களை எங்கே, எந்த வழியே வெளியேற்றுவது?

காசா முனைப் பகுதி... - காசா நகரம் 41 கிமீ நீளமும் ஆறு முதல் 12 கிமீ அகலமும் கொண்டது. வடக்கு காசா, காசா, மத்திய பகுதி, கான் யூனிஸ் மற்றும் ரஃபா என ஐந்து பகுதிகளாக காசா முனை பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு நில வழியாக மொத்தம் இரண்டு எல்லைகள் உள்ளன. அதன் வடக்கு மற்றும் கிழக்கில் எல்லையாக இஸ்ரேலும், தெற்கில் எகிப்தும் எல்லையாக உள்ளன. இந்த இரண்டுமே தற்போது மூடப்பட்டுவிட்டன. காசாவின் மேற்கில் மத்திய தரைக் கடல் உள்ளது. மேற்கு கடற்கடரை என அழைக்கப்படும் இதுவும் மூடப்பட்டுவிட்டது.

கடல் எல்லை இப்படியென்றால், காசான் வான்வெளியோ ஏற்கனவே இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. காசா விமான நிலையமும் 2002-ல் இஸ்ரேலியர்களால் அழிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, உலகத்திலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட பகுதியே காசா முனை. 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட குறுகிய நிலப்பரப்பு கொண்ட காசாவில், மிகவும் அடர்த்தியாக மக்கள் வசிக்கிறார்கள். உணவு, எரிபொருள், மருந்துகள், குடிநீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு கிட்டத்தட்ட இஸ்ரேலையே நம்பியுள்ளனர் இத்தனை மக்கள். குறைந்த அளவிலேயே சர்வதேச உதவிகள் கிடைத்து வருகின்றன.

இஸ்ரேலின் எச்சரிக்கை: நிலைமை இவ்வாறு இருக்க, 1.1 மில்லியன் மக்களை வடக்கு காசாவிலிருந்து தெற்குப் பகுதிகளுக்குச் செல்லுமாறு எச்சரித்துள்ளது இஸ்ரேல். இதற்காக விதித்துள்ள கெடு 24 மணி நேரம். 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 40 கி.மீ பயணம் செய்து மக்கள் வெளியேற வேண்டும். அப்படியே 40 கி.மீ பயணம் செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம்.

காசாவின் நில எல்லையில் இரண்டு முக்கிய நுழைவு/வெளியேறும் வாயில்கள் உள்ளன. இதன்மூலம், காசாவில் மக்கள் வெளியேறவும், உள்நுழையவும் அனுமதிக்கப்பட்டு வந்தனர் இதுநாள் வரை. அவை வடக்கில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஈரெஸ் கிராசிங் வழி ஒன்று, மற்றொன்று எகிப்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரஃபா கிராசிங் வழி. இரண்டுமே இப்போதைய போர் சூழலால் மூடப்பட்டுவிட்டன.

மூன்றாவது ஒரு வழி உள்ளது. அது கெரெம் ஷாலோம். இஸ்ரேல் - எகிப்து சந்தித்துக்கொள்ளும் முனை இது. இதுவும் இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்படுகிறது. பொதுவாக பொருட்களை கடத்த மட்டுமே இந்த வழி பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. போதாக்குறைக்கு காசா பக்கம் இருக்கும் ரஃபா கிராசிங் குண்டுவீச்சால் சேதமடைந்துவிட்டது.

வெளியேற என்னதான் வழி? - இப்போதைக்கு வழி எதுவும் இல்லை என்பதே நிகழ்நேர உண்மை. காசா வான்வெளியை பல ஆண்டுகளாக கைப்பற்றியிருக்கும் இஸ்ரேல், நிலம் அல்லது கடல் வழிகள் வழியையும் மூடிவிட்டது. போருக்கான உதவியைக் கூட உலக நாடுகள் செய்ய இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. கண்ணுக்கு தெரிந்த ஒரே வழி எகிப்து மட்டுமே. ஆனால், இதுவரை பாலஸ்தீன மக்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பாக எந்த அறிகுறியும் எகிப்திடம் இருந்துவரவில்லை. சொல்லப்போனால், நீண்ட காலமாக காசா மக்கள் தங்கள் எல்லைக்குள் நுழைவதை எகிப்து தடை செய்துள்ளது.

எனவே, காசா மக்களுக்கு உள்ள ஒரே வழி, மனிதாபிமானம் மட்டுமே. மனிதாபிமான வழிகளை ஏற்படுத்தி அவர்களை வெளியேற்ற வைத்தால் மட்டுமே அதுவும் சாத்தியமாகும். இதனாலே, ஐ.நா உட்பட உலக ஏஜென்சிகள் இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவை கடுமையாக எதிர்த்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x