Published : 13 Oct 2023 05:37 PM
Last Updated : 13 Oct 2023 05:37 PM

இஸ்ரேல் அமைச்சருடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் நேரில் சந்திப்பு - ராணுவ உதவிக்கு ஆலோசனை

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் (வலது)

டெல் அவிவ்: அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லியாட் ஆஸ்டின், இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வந்துள்ளார். இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதலை நடத்தியதை அடுத்து, இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு உலக நாடுகள், இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளதோடு, ராணுவ உதவியையும் இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது. இஸ்ரேலை ஒட்டியுள்ள கிழக்கு மெடிடெரானியன் கடற்பகுதிக்கு போர் விமானங்களுடன் கூடிய தனது போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்பி உள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை, "இஸ்ரேலின் பாதுகாப்புக்கு முழுமையான ஆதரவை தெரிவிக்கும் நோக்கில் தனது ராணுவ ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வன்முறையை மேலும் தீவிரப்படுத்த யாராவது நினைத்தால், அவர்களுக்கான எங்கள் செய்தி 'அது கூடாது' என்பதுதான்" என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லியாட் ஆஸ்டின் டெல் அவிவ் நகருக்கு விரைந்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில் செய்தி வெளியிட்டுள்ள அவர், "தற்போதுதான் நான் டெல் அவிவ் நகரில் தரை இறங்கினேன். இன்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரையும் சந்திக்க உள்ளேன். அமெரிக்கா தனது இரும்புக் கர பாதுகாப்பை இஸ்ரேலுக்கு வழங்கும் என்ற செய்தியை நேருக்கு நேராக தெரிவிக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதோடு, இஸ்ரேலின் பாதுகாப்புத் தேவைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும். நாங்கள் இஸ்ரேல் மக்களோடு நிற்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு எக்ஸ் பதிவில், "இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கெல்லன்ட்டையும், போர் அமைச்சக பிரதிநிகளையும் சந்தித்தேன். இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உடனடியாகத் தேவைப்படும் ராணுவ தளவாடங்கள் குறித்தும் பிற உதவிகள் குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு வந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து அமெரிக்காவின் ஆதரவை நேரில் தெரிவித்தார். இதையடுத்து, பாலஸ்தீன தலைவர் முகம்மது அப்பாஸ், ஜோர்டான் அரசர் அப்துல்லா ஆகியோரைச் சந்தித்து, போரின் தீவிரத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தார்.

இந்நிலையில், காசா நகரில் உள்ள பாலஸ்தீன மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. பாதுகாப்பு கருதி அவர்கள் தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேல் பாதுகாப்புப் படை வலியுறுத்தியுள்ளது. பொதுமக்கள் காசா நகரில் இருந்து வெளியேறிய பிறகு அங்கு தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x