Published : 13 Oct 2023 03:59 PM
Last Updated : 13 Oct 2023 03:59 PM

ஹமாஸ் தாக்குதல் திட்டத்தை இஸ்ரேல் உளவுத் துறை ‘தவறவிட்டது’ எப்படி? - அமெரிக்க நிபுணரின் பார்வை

கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் இரட்டை கோபுரமும், பென்டகனும் தாக்கப்பட்டபோது, அது உலகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம், அப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என்று அமெரிக்கா மட்டும் இல்லை, யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நடந்தது. அதேபோல், இப்போதும் ஒரு எதிர்பாராத தாக்குதல் நடந்து பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இந்த முறை தாக்கப்பட்டது இஸ்ரேல், தாக்கியவர்கள் ஹமாஸ் குழுவினர். இந்த இரண்டு தாக்குதல்களிலும் உளவுத் துறையின் ‘தோல்வி’ பெரும் பங்கு வகிக்கின்றன.

தனது சொந்த நாட்டுக்குள்ளேயும், நாட்டுக்கு வெளியேயும் இருக்கும் அச்சுறுத்தல்கள் பற்றிய சாத்தியமான தகவல்களை சேகரிக்கும் திறன்களின் அடிப்படையில் அதிநவீன உளவு அமைப்பு திறன்கள் கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது இஸ்ரேல். எனினும், கடந்த 7-ஆம் தேதி சனிக்கிழமை இஸ்ரேலின் 20 நகரங்கள் மற்றும் பல ராணுவ நிலைகள் மீது ஹமாஸ் முன்னெப்போதும் இல்லாத அளவில் தாக்குதல் நடத்தியது. இவ்வளவு பெரிய தாக்குதல் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து அறிய இஸ்ரேல் எப்படித் தவறியது என்ற சந்தேகம் இங்கு நமக்குள் எழுகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் உளவுத் துறை இந்தத் தாக்குதலுக்கு முன்பாகவே ஹமாஸ் குழுக்களின் சில சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை கண்டுபிடித்திருந்ததது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அக்.10-ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், உளவுத் துறையின் அந்தக் கண்டுபிடிப்பு முழுவதுமாக செயல்முறைக்கு வரவில்லை அல்லது சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை... கடந்த 2001 செப்.11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பு நடந்ததைப் போலவே!

“நுண்ணறிவு பகுப்பாய்வு என்பது ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட நுண்ணறிவு தகவல்களில் இருந்து ஆயிரம் நுண்ணறிவு ஜிக்சா தகவல்களை ஒன்றிணைத்து அவற்றைக் கொண்டு ஆட்சியாளர்களுக்கு தேவையான ஒரு முடிவுக்கு வர முயற்சிப்பது" என்கிறார் அமெரிக்க உளவுத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய உளவுத் துறை மற்றும் தீவிரவாத எதிர்ப்புத் துறை அறிஞர் ஜவேத் அலி. இஸ்ரேலிய உளவுத் துறை எவ்வாறு செயல்படுகிறது என்று அறிந்துகொள்ளவும், ஹமாஸ் ஊடுருவலுக்கு வழிவகுத்த அமைப்பில் உள்ள இடைவெளிகளைப் புரிந்து கொள்வதற்காவும் ஜவேத் அலியுடன் ‘தி கான்வர்சேஷன்’ தளம் பேசி வெளியிட்ட நேர்காணலில் இருந்து...

தொடரும் இந்தத் தாக்குதல்களைப் பார்க்கும் போது உங்களுக்குள் என்ன கேள்விகள் எழுகின்றன?

“மிகப் பெரிய அளவிலான தாக்குதலுக்காக மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், இஸ்ரேலிய உளவுத் துறையிடமிருந்து சதித் திட்டத்தினை மறைக்க வேண்டும் என்பதற்காக ஹமாஸ் அதிகம் முயற்சித்திருக்க வேண்டும். நடந்திருக்கும் தாக்குதலின் மேம்பட்ட அம்சங்களைப் பார்க்கும்போது, இந்தச் செயல்முறையில் ஈரானின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். என்றாலும். இதுகுறித்த உளவுத் துறை ஆதாரம் எதுவும் தங்களிடம் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

இறுதியாக, ஹமாஸ், இஸ்ரேலுக்கு அருகில் அதன் நுழைவாயிலில் இருக்கிறது. ஈரானில் இருந்து 1,000 மைல்கள் தள்ளியிருக்கும் காசா மற்றும் வெஸ்ட் பேங்கில் என்ன நடக்கிறது என்று இஸ்ரேலால் நன்றாக அறிந்துகொள்ள முடியும் என்று ஒருவர் நினைக்கலாம். அப்படியென்றால், இப்படி ஒரு விஷயம் நடக்கப்போவதை இஸ்ரேல் எப்படி அறியத் தவறியது? இஸ்ரேலின் சமீபத்திய தீவிரவாத எதிப்பு நடவடிக்கையால் ஹமாஸ் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும், தற்போது நடந்த தாக்குதல் போன்ற ஒன்றை நடத்த அவர்களுக்கு திறனும் நம்பிக்கையும் கிடையாது என்று சில இஸ்ரேலிய அதிகாரிகள் நம்பினர்.

இஸ்ரேலிய உளவுப் பிரிவு எவ்வாறு செயல்படுகிறது? சர்வதேச அளவில் அது எவ்வாறு பார்க்கப்படுகிறது?

“சர்வதேச அளவில் உள்ள மிகவும் திறன்வாய்ந்த மற்றும் அதிநவீன உளவுத் துறை உள்ள நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. தற்போது இஸ்ரேலில் செயல்படும் உளவு அமைப்புகளின் பணிகள் மற்றும் பொறுப்புகள் எல்லாம் அமெரிக்காவின் உளவு அமைப்புகளை போலவே, அதன் பிரதிபலிப்புகளாகவே இருக்கும்.

இஸ்ரேலில் ‘ஷின் பெட்’ என்பது அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு சேவைப் பணியில் உள்ளது. இது அமெரிக்காவின் எஃப்பிஐ போன்றது. உள்நாட்டுக்குள் இருக்கும் அச்சுறுத்தல்களை இது கண்காணிக்கிறது. நாட்டுக்கு வெளியில் இருக்கும் அச்சுறுத்தல்ளை கண்காணிக்கும் வகையில் சிஐஏவுக்கு இணையாக இஸ்ரேலிடம் ‘மொஸ்ஸாட்’ உள்ளது. மூன்றாவதாக, அமெரிக்க ராணுவப் புலனாய்வு முகமையைப் போல, இஸ்ரேலிடம் ‘இஸ்ரேல் ராணுவப் புலனாய்வு முகமை’ உள்ளது. இவை தவிர ராணுவ புலனாய்வு முகமைக்குள் சின்னச் சின்ன அமைப்புகள் உள்ளன. இவை பல்வேறு வகையான புலனாய்வு விவகாரங்களில் கவனம் செலுத்துகின்றன.

பெரும்பாலான மேற்கத்திய நாடுகளைப் போல இஸ்ரேலும் பல்வேறு புலனாய்வு ஆதாரங்களையே நம்பியுள்ளது. உளவுத் துறை நிறுவனங்களுக்கு, முக்கியமான தகவல்களை நேரடியாக கையாளக்கூடிய நுண்ணறிவு சிந்தனையுள்ள உளவாளிகள் என அறியப்படும் ஆட்களை நியமிப்பதும் இதில் அடங்கும். இதில் ஒன்று ‘சிக்னல் இன்டலிஜன்ஸ்’ பிரிவு என்று அழைக்கப்படுவது. இது தொலைப்பேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் அல்லது இஸ்ரேலியர்கள் பயன்படுத்தும் உரைநடை செய்திகள் போன்ற பல்வேறு வகையான மின்னணு தொடர்புகளை பற்றியது. தவிர அங்கு ‘இமேஜிரி இன்டலிஜன்ஸ்’ என்ற ஒன்று உள்ளது. அது செயற்கைக்கோள் படங்களுடன் தொடர்புடையது. உதாரணமாக தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அல்லது மறைவிடங்கள், தளவாடங்களை போன்றவற்றைப் படம் பிடிக்கிறது.

நான்காவது வகையான நுண்ணறிவு என்பது ‘ஓப்பன் சோர்ஸ்’ என்படும் இணையவெளி மன்றங்களில் நடக்கும் அரட்டைகள் போன்ற பொதுவெளியில் எளிதாக கிடைக்கும் தகவல்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உளவுத்துறையில் எனது பணியினை நான் முடித்துக்கொள்வதற்கு முன்பாக, மற்ற பாம்பரிய உளவு நுண்ணறிவு வகைகளைப் பார்ப்பதை விட இந்த பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.”

அமெரிக்க உளவு அமைப்புகளில் இருந்து இஸ்ரேல் உளவு அமைப்பு எவ்வாறு வேறுபட்டுள்ளது?

“அமெரிக்காவைப் போல ஒட்டுமொத்த உளவுத் துறை ஒருங்கிணைப்பாளர் என்ற ஒன்று இஸ்ரேலிடம் இல்லை. அதாவது, வெவ்வேறு உளவுத் துறை கூறுகளைப் பற்றி அறிந்த, அவற்றை மேற்பார்வையிடும் ஒரு நபர். அமெரிக்க உளவு அமைப்பு தேசிய புலனாய்வு இயக்குநர் என்ற பதவியைக் கொண்டுள்ளது. இவர் 2004-ல் உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு இயக்குநர் அலுவகத்தை வழி நடத்துகிறார். இவை 9/11 கமிஷனின் பரிந்துரைகள். அமெரிக்காவின் உளவுத் துறைகளுக்கான அணுகுமுறை பல்வேறு அமைப்புகள் மற்றும் அலுவலகங்களால் பிளவுபட்டுக் கிடப்பதை கண்டறிந்த பின்னர் இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டது.

எந்த ஓர் உளவு நிறுவனமும் சொந்தமாக தீர்க்க முடியாத சிக்கலான பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் போதும் அல்லது உளவுத் துறை பகுப்பாய்வில் வேறுபாடுகள் எழும்போது அந்த சிக்கலைத் தீர்க்க சுதந்திரமாக சிந்திக்கக் கூடிய நிபுணரைக் கொண்ட ஓர் அலுவலகம் தேவை. அந்த வேலையை இந்த அலுவகம் செய்கிறது. நான் பல ஆண்டுகளாக தேசிய புலனாய்வு இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றியிருக்கிறேன். அங்கு என் வேலைகளில் ஒன்று தேசிய புலனாய்வு இயக்குநருக்கு அறிக்கை சமர்ப்பிப்பது.

இது மாதிரியான மத்திய அலுவலகம் மற்றும் செயல்பாடுகளுக்கு இணையான ஒன்று இஸ்ரேலிடம் இல்லை. எதிர்காலத்தில் ஒரு விரிவான உளவு ஒருங்கிணைப்பாளர் எவ்வாறு இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க உதவ முடியும் என்று இஸ்ரேஸ் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து.”

இஸ்ரேலுக்கான அச்சுறுத்தல்களை கண்காணிப்பதில் அமெரிக்காவின் பங்கு என்ன? அப்படி ஏதாவது இருக்கிறதா?

“அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகவும் வலுவான உளவுத் துறை உறவினை கொண்டுள்ளன. இது இந்த இரண்டு தரப்புக்குமானது மட்டுமே. அதாவது, இந்த இரண்டு நாட்டுக்கும் இடையிலானது மட்டும்தான். இது உளவுத் துறையை பகிர்ந்துகொள்ளும் பெரிய சர்வதேச நாடுகளைக்கொண்ட குழுக்களின் ஒரு பகுதியாக இல்லை.

அமெரிக்கா ‘ஐந்து கண்கள்’என்றழைக்கப்படும் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுடன் பெரிய அளவிலான உளவுத் துறை உறவினைக் கொண்டுள்ளது. என்றாலும் இந்த இரு தரப்பு உளவுத் துறை உறவின் பொதுவான விதி என்னவென்றால், எந்த ஒரு தரப்பு பற்றிய அச்சுறுத்தல்களை அறிய வரும் போது அதனை தானாகவே அடுத்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

இது, உக்ரைன், ரஷ்யா மற்றும் சீனா போன்ற உலகின் பிற பகுதிகளுக்கு தனது உளவுத் துறை முன்னுரிமைகளை அமெரிக்கா மாற்றும் சந்தர்ப்பமாக கூட இருக்கலாம். இதன்விளைவாக, இந்த குறிப்பிட்ட ஹமாஸ் தாக்குதல் பற்றிய குறிப்பிடத்தகுந்த உளவுத்துறை தகவல்கள் அமெரிக்காவுக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதனால் அவர்களால் இஸ்ரேலுக்கு எந்தவிதமான தகவல்களை தெரிவித்து எச்சரிக்க முடியாமல் போயிருக்கலாம்.”

| மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு, உள்நாட்டு பயங்கரவாதம், சைபர் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் கொள்கை ஆகியவற்றின் இணை பேராசிரியர் ஜாவேத் அலி எழுதி, தி கான்வர்சேஷன் தளத்தில் வெளியான நேர்காணல் கட்டுரையின் தமிழாக்கம் இது. |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x