Published : 13 Oct 2023 12:15 PM
Last Updated : 13 Oct 2023 12:15 PM

காசா தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் வேறு முனைகளில் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிராதொலைஹியான்

லெபனான்: காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் வேறு முனைகளில் மோதல்கள் வெடிக்கலாம், போர் ஏற்படலாம் என ஈரான் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே உள்ளது காசா பகுதி. தன்னாட்சி பெற்ற பகுதியாக உள்ள காசா முனை ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டு. ஹாமஸுக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறிவருகிறது. ஹமாஸ் குழுவினருக்கு ஆயுதப் பயிற்ச்சியை ஈரான் வழங்குவதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து காசாவைக் கைப்பற்ற முயற்சிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு. மேலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அல்ல அது ஒரு போராளி குழு என்பது பாலஸ்தீனத்தின் நிலைப்பாடாக உள்ளது.

இந்தச் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இதற்கான இஸ்ரேலின் பதிலடியில் காசா கலங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயுள்ளன.

இந்நிலையில், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் உலகின் பிற பகுதிகளில் மோதல் வெடிக்கும். மேலும் பல போர் முனைகள் உருவாகும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிராதொலைஹியான் எச்சரித்துள்ளார். லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்புல்லா குழுவை சுட்டிக்காட்டி அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

முன்னதாக நேற்றிரவு அவர் லெபனான் தலைநகர் பெய்ரூட் வந்தடைந்தார். அவருக்கு ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புகளின் பிரதிநிதிகள் வரவேற்பு நல்கினர். லெபனான் அதிகாரிகளும் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காசாவை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் அங்கே போர்க் குற்றங்களை நிகழ்த்திவருகிறது. இது வேறு சில பகுதிகளில் மோதல்கள் வெடிக்கத் தூண்டும். வேறு போர் முனைகளை உருவாக்கும். இதைத் தடுப்பது இஸ்ரேலின் கைகளில்தான் உள்ளது. இஸ்ரேல் உடனடியாக காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x