Published : 12 Oct 2023 10:07 PM
Last Updated : 12 Oct 2023 10:07 PM
டெல் அவிவ்: ஹமாஸை கட்டுப்படுத்தும் விதமாக காசாவில் 6 நாட்களில் 6,000 குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய விமானப் படை தெரிவித்துள்ளது. மேலும், இடைவிடாமல் தாக்குவோம் எனவும் ஹமாஸை இஸ்ரேல் விமானப் படை எச்சரித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அமெரிக்கா. இதனிடையே, அமெரிக்காவின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் சென்றுள்ளார். அவர், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை சந்தித்து பேசினார். தொடர்ந்து தலைநகர் டெல் அவிவ் நகரில் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் செய்தியாளர் சந்தித்த பிளிங்கன், "நான் இங்கு அமெரிக்க அமைச்சராக மட்டுமல்ல, பிளிங்கன் என்ற ஒரு யூதனாகவும் உங்கள் முன் வந்திருக்கிறேன். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்கள் நாஜி படுகொலைகளின் எதிரொலிப்பு போல் உள்ளது. இஸ்ரேலுடன் அமெரிக்கா என்றென்றும் நிற்கும்" என்றார்.
தொடர்ந்து இஸ்ரேலியர்கள் மத்தியில் பேசிய பிளிங்கன், “உங்களைத் தற்காத்துக் கொள்ளும் அளவுக்கான வலிமை உங்களிடம் (இஸ்ரேலிடம்) இருக்கலாம். ஆனால், அமெரிக்கா இருக்கும் வரை, நீங்கள் ஒருபோதும் அதை செய்ய வேண்டிய தேவை இருக்காது. ஏனென்றால் நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம். அமைதியையும் நீதியையும் விரும்பும் எவரும் ஹமாஸின் பயங்கரவாதங்களை கண்டிக்க வேண்டும். பாலஸ்தீனியர்களின் விருப்பங்கள் நியாயமானவை. ஆனால், ஹமாஸ் பாலஸ்தீனிய மக்களையும், சுதந்திரம் மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான அவர்களின் நியாயமான விருப்பங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்றார். அமெரிக்க வெளியுறவு அமைச்சரை அடுத்து பென்டகன் தலைவரும் தற்போது இஸ்ரேலுக்கு வந்துள்ளார்.
காசாவில் 6,000 குண்டுகள் வீசப்பட்டன: ஹமாஸை கட்டுப்படுத்தும் விதமாக காசாவில் 6,000 குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது. "டஜன் கணக்கான போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் காசா பகுதி முழுவதும் ஹமாஸ் அமைப்பின் இலக்குகளைத் தாக்கியுள்ளன. இதுவரை 6,000 குண்டுகளை ஹமாஸ் இலக்குகளை வீசிப்பட்டுள்ளது. இதில் 3,600 இலக்குகள் ஹமாஸ் இலக்குகளை தாக்கியுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் ஆயுத தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் வரை நாங்கள் இடைவிடாமல் எங்கள் தாக்குதலை தொடர்வோம்" என இஸ்ரேலிய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Dozens of fighter jets and helicopters attacked a series of terrorist targets of the Hamas terrorist organization throughout the Gaza Strip.
So far, the IAF has dropped about 6,000 bombs against Hamas targets. pic.twitter.com/3Xm1vxvq7D— Israeli Air Force (@IAFsite) October 12, 2023
பலி எண்ணிக்கை: காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 1,417 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் பாதி பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள். 6,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கடற்கரையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3,200 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடங்கி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தாக்குதல் காரணமாக காசாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள் ஆகியவற்றின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. இதனால், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அடிப்படைத் தேவைகள் இன்றி கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார்கள்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஹமாஸ் ஆதரவாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ள இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சர், “ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை விடுவித்தால் மட்டுமே காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை நாங்கள் வழங்குவோம். அவர்கள் தரப்பில் மனிதாபிமானம் காட்டினால்தான் பதிலுக்கு நாங்கள் எங்கள் மனிதாபிமானத்தைக் காட்டுவோம். அதுவரை காசாவுக்கு மின்சாரமோ, குடிநீரோ, எரிபொருளோ வழங்க மாட்டோம். எங்களுக்கு யாரும் போதனை செய்யத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குண்டுக்கும் ஓர் உயிர்: இஸ்ரேல் ராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் விடுத்துள்ள மிரட்டல் செய்தியில், ‘‘ எச்சரிக்கை விடுக்காமல், காசா பகுதியில் இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசுகிறது. இஸ்ரேல் வீசும் ஒவ்வொரு குண்டுக்கும், இஸ்ரேல் பிணைக் கைதி ஒருவரை கொல்வோம்’’ என கூறியுள்ளது. இஸ்ரேல் மக்கள் 150 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளோம் என ஹமாஸ் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.
இஸ்ரேலில் அவசரநிலை அரசு: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எதிர்க்கட்சி தலைவர் பென்னி கன்ட்ஸ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் யாவ் காலன்ட் ஆகியோர் இணைந்து அவசர நிலை அரசு உருவாக்க சம்மதித்துள்ளனர். இவர்கள் போர்க்கால அமைச்சரவையாக செயல்படுவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT