Published : 11 Oct 2023 10:15 PM
Last Updated : 11 Oct 2023 10:15 PM
டெல் அவிவ்: காசாவில் ஹமாஸுடனான போருக்கு மத்தியில் இஸ்ரேலில் எதிர்க்கட்சியுடன் இணைந்து போர்க்கால ஒற்றுமை அரசை அமைத்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. இதனிடையே, இஸ்ரேல் தாக்குதலால் கடும் பாதிப்புக்குள்ளான காசாவின் நிலை கவலைக்குரியதாக உள்ளது.
அதன்படி, புதிய போர்க்கால அமைச்சரவையில் பிரதமர் நெதன்யாகு, அந்நாட்டின் எதிர்க்கட்சிப் பிரமுகரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான பென்னி காண்ட்ஸ் மற்றும் இஸ்ரேலின் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைச்சரவை தற்போது நடந்து வரும் போர் தொடர்பான விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் என்றும், போர் முடியும்வரை போருக்கு தொடர்பில்லாத எந்தச் சட்டமும், அரசின் மற்ற தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்பட மாட்டாது என்றும் அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போர்க் காலங்களில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்படும்போது, அதில் ஐந்து உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என இஸ்ரேல் நாட்டு சட்டம் கூறுகிறது. இதனால், தற்போது அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை அமைச்சரவையில் மேலும் இருவர் இணைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்கள் யார் என்று வெளியிடப்படவில்லை.
முன்னதாக, இஸ்ரேலின் மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான யாயர் லாபிட்டுக்கு புதிய ஒற்றுமை அமைச்சரவையில் இணைய அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் அந்த அழைப்பை நிராகரித்துள்ளார் என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அசாதாரணமான சூழலை சமாளிக்கும் வகையில் இந்த புதிய அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. போரை முன்வைத்து பல ஆண்டுகளாக கசப்புகளை மறந்து இஸ்ரேலில் அரசியல் ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உயிரிழப்பு: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில், காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் 1,055-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 3,000 பேர் காயமடைந்துள்ளனர். காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; சுமார் 5,000 பேர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் மின்சார தட்டுப்பாட்டால் 100 குழந்தைகள் பாதிப்பு: காசாவில் செயல்பட்டுவந்த ஒரே மின் உற்பத்தி நிலையத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காசா பகுதியை முழுமையாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், எரிபொருள் ஏற்றுமதியைத் தடுத்துள்ளதால் எரிபொருள் இல்லாமல் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டு மின் உற்பத்தி நிலையமும் மூடப்பட்டுள்ளது. இதனால் காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகள் ஜெனரேட்டர்களை நம்பியுள்ளன. ஜெனரேட்டர்களும் ஓரிரு நாட்கள் மட்டுமே இருக்கும் என காசா நகரத்தில் உள்ள அல்-வஃபா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் ஹசன் கலாஃப் தெரிவித்துள்ளார்.
அல் ஜசீராவிடம் பேசிய அவர், "காசாவில் தற்போது 100 புதிதாகப் பிறந்த குழந்தைகள் மருத்துவ உபகரணங்களை கொண்டே சிகிச்சை பெற்றுவருகின்றனர். குழந்தைகள் மட்டுமல்ல, சுமார் 1,100 டயாலிசிஸ் நோயாளிகளும் மின்சார உபகரணங்களை சார்ந்தே இருப்பதால் அவர்கள் உயிர் பிழைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் முற்றுகை கிட்டத்தட்ட கொலைக்கு சமமாக மாறி வருகிறது" என்று வேதனை தெரிவித்தார்.
ஐநா ஊழியர்கள் உயிரிழப்பு உயர்வு: காசா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஐ.நா ஊழியர்கள் உயிரிழப்பின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியான UNRWA-வில் பணிபுரிந்தவர்கள் போரில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
காசா நகரில் இருந்து 1.87 லட்சம் பேர் இடம்பெயர்வு: ஐ.நா. அகதிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “காசா நகரில் இருந்து 1,87,500 பேர் வெளியேறி உள்ளனர். இவர்களில் 1,37,00 பேர் பள்ளி, கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காசா நகரில் 790 அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகி உள்ளன. 5,330 அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “காசா நகருக்கான குடிநீர், உணவு, மருந்து விநியோகம் தடைபட்டிருக்கிறது. இப்பகுதி மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எரிபொருள், மின்சாரம், தண்ணீர், மருந்துகள் இல்லாமல் மருத்துவமனைகளை நடத்த முடியாது. எனவே சர்வதேச சமுகம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்" என்று கோரப்பட்டு உள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வால்கர் துர்க் கூறும்போது, “காசா நகருக்கு தேவையான அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்படி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது. இஸ்ரேலின் நடவடிக்கை சர்வதேச சட்டத்துக்கு எதிரானது” என்று தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பில் 30,000 பேர்: ஹமாஸ் அமைப்பில் சுமார் 30,000 பேர் உள்ளதாகக் கூறப்படுகிறது. காசா நகர் பதுங்கு குழிகளில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து அவர்கள் தொடர்ச்சியாக ஏவுகணை குண்டுகளை வீசி வருகின்றனர். ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத குழுக்களும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த குழுக்கள் இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றன. அதோடு இஸ்ரேல் எல்லைப் பகுதியில் ஊடுருவ ஹமாஸ், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
இஸ்ரேலின் முப்படைகளில் 1.73 லட்சம் வீரர், வீராங்கனைகள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் போரில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதோடு ராணுவப் பயிற்சி பெற்ற 4.65 லட்சம் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளனர். அவர்களில் 3 லட்சம் பேர் போரில் பங்கேற்க வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT