Published : 11 Oct 2023 08:41 PM
Last Updated : 11 Oct 2023 08:41 PM

“உங்களையும் ஒருநாள் சுட்டு வீழ்த்துவர்” - இஸ்ரேல் பிரதமருக்கு துருக்கி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை

துருக்கி கல்வித் துறை துணை அமைச்சர் நசீப் இல்மாஸ்

துருக்கி: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்துவரும் நிலையில், துருக்கி அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் தொடர்பான காட்சிகளை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை டேக் செய்து துருக்கி கல்வித் துறை துணை அமைச்சர் நசீப் இல்மாஸ், “உங்களையும் ஒருநாள் சுட்டு வீழ்த்துவார்கள். அப்போது நீங்களும் மிக கொடூரமாக இறப்பீர்கள்” என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பதிவுகள் உலக அளவில் கவனம் ஈர்த்து வருகின்றன.

முன்னதாக, இஸ்ரேல் மக்களிடம் உரையாற்றிய அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, "இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. போரை நாங்கள் விரும்பவில்லை. மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டுதனமான முறையில் அது எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. போரை நாங்கள் தொடங்கவில்லை என்றாலும் நாங்கள் அதனை முடித்து வைப்போம். எங்களைத் தாக்கியதன் மூலம் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை ஹமாஸ் செய்துவிட்டார்கள் என்பதை நாங்கள் அவர்களுக்கு புரியவைப்போம். இன்னும் பல தசாப்தங்களுக்கு ஹமாஸ்களும் இஸ்ரேலின் பிற எதிரிகளும் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு சரியான விலையை நாங்கள் கொடுப்போம்.

குடும்பங்களை வீடுகளில் வைத்துக் கொன்றது, இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை படுகொலைச் செய்தது. குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கடத்துவது, குழந்தைகளை கட்டிப்போட்டு தூக்கிலிட்டு எரித்தது என அப்பாவி இஸ்ரேலியர்கள் மீது ஹமாஸ் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மனதை உலுக்குகிறது. ஹமாஸ்கள் காட்டுமிராண்டிகள். ஹமாஸ்கள் ஐஎஸ்ஐஎஸ் போன்றவர்கள். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை ஒடுக்க நாகரிக சமூகம் ஒன்றிணைந்தததைப் போல ஹமாஸ்களை ஒழிக்க நாகரிக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்" என்று பேசினார்.

பின்னணி: இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். சுமார் 5 ஆயிரம் ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதலை இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடங்கினர். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. பதிலுக்கு இஸ்ரேலும் தனது தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. இரு தரப்பிலும் சேர்ந்து பலி எண்ணிக்கை 2,000-ஐ நெருங்கியுள்ளது. ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x