Published : 11 Oct 2023 05:10 PM
Last Updated : 11 Oct 2023 05:10 PM
டெல் அவில்: ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலிய கிராமம் ஒன்று முற்றிலும் அழிந்துள்ளதுடன், 40 குழந்தைகள் வரை கொடூரமாக கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1,000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் நடத்திய இந்த முன் எப்போதும் இல்லாத இந்தத் தாக்குதலில் தெற்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள ஒரு கிராமம் முற்றிலும் அழிந்துள்ளது தெரியவந்துள்ளது. காசா பகுதியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள தெற்கு இஸ்ரேலிய கிராமம் கிப்புட்ஸ் கஃபர் ஆசா. இக்கிராமத்தில் உள்ள 40 குழந்தைகள் உட்பட பலரை ஹமாஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் குற்றம்சுமத்தியுள்ளது. குழந்தைகளின் தலை துண்டிக்கப்பட்டும், உடல்கள் எரிக்கப்பட்டும் மிருகத்தனமாக கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், "சனிக்கிழமை தாக்குதலை தொடங்கிய ஹமாஸ் கஃபர் ஆசா கிராமத்தை முற்றிலுமாக சூறையாடியுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படைகள் கஃபர் ஆசா கிராமத்தை காணச் செல்லும்போது இத்தைகைய படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதை கண்டறிந்துள்ளனர். பெரியவர்கள், சிறியவர்கள் பாகுபாடுகள் இல்லாமல் கிராமத்தைச் சேர்ந்த பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று கிராமத்தை நேரில் பார்த்த நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் மற்றும் புகைப்பட கலைஞர் தெரிவித்துள்ளனர். கஃபர் ஆசா கிராமத்தை பார்வையிட நியூயார்க் டைம்ஸ், பிபிசி உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களால் இஸ்ரேல் ராணுவத்தால் அனுமதிக்கப்பட்டன. அதன்பின்னரே இந்தச் சம்பவம் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது.
இறந்தவர்களில் 40 பேர் குழந்தைகள். பெரும்பாலும் தலை துண்டிப்பு போன்ற கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். குறைந்தது ஒரு டஜன் சடலங்கள் சாலைகளிலும் புல்வெளிகளிலும் வீசப்பட்டுள்ளன. மேலும், சாலைகளில் இருந்த கார்கள், குடியிருப்புகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண இஸ்ரேலிய ராணுவம் எலும்புகளைப் பயன்படுத்த முயற்சித்து வருகிறது என கிராமத்தை நேரில் பார்த்த நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கைக்குழந்தைகள் உட்பட இக்கிராமத்தைச் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதாக அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.
இக்கிராமத்தில் மீட்பு பணிகளை செய்துவரும் இஸ்ரேலிய மேஜர் ஜெனரல் இட்டாய் வெருவ், நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், “இது ஒரு போரும் அல்ல, போர்க்களமும் அல்ல; இது ஒரு படுகொலை. 40 ஆண்டுகளாக ராணுவ சேவையில் இருக்கிறேன். இது என் வாழ்நாளில் நான் பார்த்திராத ஒன்று. எங்கள் தாத்தா, பாட்டி காலத்தில் நடந்த படுகொலை போன்ற ஒன்று. குழந்தைகள், தாய், தந்தை, முதியவர்களை அவர்களின் படுக்கையறைகளில், சமையல் அறைகளில், தோட்டங்களில் என பார்த்த இடங்களில் வைத்து கொன்றுள்ளனர். துப்பாக்கி, கையெறி குண்டுகள், கத்தி என பல ஆயுதங்களை பயன்படுத்தியிருக்கலாம். அப்பாவி பொதுமக்களை குறிவைத்து அட்டூழியங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது” என மனமுடைந்துள்ளார்.
கஃபர் ஆசா கிராமம் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திவருகின்றன. விவசாயிகள் மிகுந்த கிப்புட்ஸ் கஃபர் ஆசா கிராமம், எழில் கொஞ்சும் பகுதியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் போரின் தாண்டவத்தை விவரிக்கும் விதமாக உள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஹமாஸ் தரப்பில் இருந்து இதுவரை உறுதியான விளக்கம் எதுவும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT