Published : 30 Jan 2018 03:43 PM
Last Updated : 30 Jan 2018 03:43 PM
மிகவும் ஆபத்தான 11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, எகிப்து, ஈரான், லிபியா, தெற்கு சூடான், ஏமன், சூடான், இராக், மாலி, வடகொரியா, சோமாலியா, சிரியா ஆகிய நாடுகள் இருந்து அகதிகள் அமெரிக்கா வரத் தடை செய்யப்பட்டு இருந்தனர். இவர்களை இனி ஏற்கும் முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதும், நாட்டில் தீவிரவாத சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்கர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் 11 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அகதிகளுக்கு தடை விதித்தார்.
இவை பெரும்பாலும் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் நாடுகளாகும். இந்த தடைக்கு அமெரிக்காவில் ஒருபுறம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோதிலும், தடையை அமெரிக்கா தீவிரமாக அமல்படுத்தியது.
இந்நிலையில், எகிப்து, ஈரான், லிபியா, தெற்கு சூடான், ஏமன், சூடான், இராக், மாலி, வடகொரியா, சோமாலியா, சிரியா ஆகிய 11 நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்க அமெரிக்கா இப்போது முடிவு செய்துள்ளது.
இது குறித்து அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் கிரிஸ்ட்ஜென் நீல்சன் வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:
''மிகவும் ஆபத்து நிறைந்த, பாதுகாப்பு அச்சம் தரக்கூடிய 11 நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு இதுவரை அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டு இருந்தது. அந்த தடையை நீக்க அமெரிக்க அரசு முடிவுசெய்துள்ளது.
ஆனால், இந்த 11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் முன்பு இருந்ததைக் காட்டிலும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுவர்கள். அவர்களின் வாழ்க்கை பின்புலத்தை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்புதான் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
அகதிகளை ஏற்கும் எங்களின் திட்டத்துக்கு, எந்தவிதமான பாதகமான விளைவுகளும் இதன் மூலம் ஏற்பட்டுவிடக்கூடாது. சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அகதிகளை ஏற்க இருக்கிறோம். அதேசமயம், அமெரிக்க மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வோம்.
இந்த புதிய முறையில், 11 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்கா விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரரின் குடும்பத்தாரிடமும் நேர்காணல் நடத்தப்படும், விண்ணப்பதாரரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை செய்யப்படும், ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளரா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்''.
இவ்வாறு கிரிஸ்ட்ஜென் நீல்சன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT