Published : 10 Oct 2023 09:56 AM
Last Updated : 10 Oct 2023 09:56 AM
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் ஈடுபட வேண்டாம் என்று சிரியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு, கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 900க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர்கள் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மட்டும் 260 பேர் கொல்லப்பட்டனர். எல்லையை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்த பலரை ஹமாஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொன்றுள்ளனர்.
ஹமாசின் இந்த தாக்குதலை அடுத்து அதற்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனத்தை அறிவித்தது. இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில், காசாவில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை நாங்கள் தொடங்கவில்லை ஆனால், நாங்கள் வெற்றிகரமாக முடித்து வைப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு வலிமையான பதிலடி கொடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
2020ல் இஸ்ரேல் உடன் நல்லுறவை ஏற்படுத்திய முதல் அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகம், ஹமாசின் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெியிட்ட அறிக்கையில், இஸ்ரேலிய மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இது நிலைமையை தீவிரமாக்கும் என்றும் அது கூறியது.
இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் ஈடுபட வேண்டாம் என்று சிரியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவின் உயர்மட்டத் தலைவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து, சிரியாவுக்கு தெரிவித்துள்ள எச்சரிக்கை குறித்து அமெரிக்காவிடம் ஐக்கிய அரபு அமீரகம் பகிர்ந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல், இந்த போரில் ஈடுபட வேண்டாம் என ஈரானுக்கு அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மற்றொரு முக்கிய நகர்வாக, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலை வன்மையாக கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், சமீப காலத்தில் நிகழ்ந்த மிக கொடூரமான தாக்குதல் இஸ்ரேலியர்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதல் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT