Published : 09 Oct 2023 08:25 PM
Last Updated : 09 Oct 2023 08:25 PM

‘‘மிருகங்களுடன் மோதுகிறோம்’’ - காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் உத்தரவு

காசா: ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா பகுதியில் இஸ்ரேல் தொடர் வான்வெளித் தாக்குதல்களை நடத்தி வரும்நிலையில், காசா பகுதியை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ் காலண்ட் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ், ‘‘காசா பகுதியை நாங்கள் முழுமையாக முற்றுகையிட்டுள்ளோம். அப்பகுதி அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு மின்சாரம், உணவு, குடிநீர், எரிவாயு என எதுவும் கிடைக்க அனுமதிக்க போவதில்லை. எல்லாம் முடக்கப்பட்டுள்ளது. நாங்கள் மனிதர்களுடன் சண்டையிடவில்லை. மிருகங்களுடன் மோதுகிறோம். எனவே, அதற்கேற்ப தான் நடந்துகொள்ள முடியும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நேற்றைய ஒரே நாள் இரவில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் என ஆகியவற்றை கொண்டு காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாதிகளின் 500-க்கும் மேற்பட்ட இலக்குகளில் தாக்கப்பட்டன என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கர்கள் உயிரிழப்பு: லெபனானில் இருந்து ஆயுதங்களுடன் ஊடுருவிய தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 9 பேர் பலியாகியுள்ளனர் என அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை முதல் ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 260 பேர் ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இந்தத் தாக்குதல்களின்போது 100 இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டு, காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வெளித் தாக்குதல்களால் காசா பகுதியில் வாழ்ந்து வந்த பாலஸ்தீனயர்கள் 500 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.

மக்கள் வெளியேற்றம்: இந்தப் போர் காரணமாக, பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இதுவரை 1,20,000 மக்கள் வெளியேறியுள்ளனர். காசா பகுதியில் 1,00,000 ரிசர்வ் துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு 130 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துவைத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

சமீப நாட்களில் இஸ்ரேலிய குடியேறிகள் அல் - அக்ஸா மசூதி வளாகத்தில் நடத்திய தாக்குதல் மற்றும் சமீப மாதங்களில் இஸ்ரேலால் குறிப்பிடத்தகுந்த அளவில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டத்தை அடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பல தசாப்தங்களாக நடந்து வரும் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் சூழலை ரத்தக் களமாக்கியுள்ளது. இதற்கு, இஸ்ரேல் பதிலடியாக காசா பகுதிகளில் வான்வெளித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

‘ஹமாஸ் தீவிரவாதிகள் ஊடுருவப்பட்ட காசாவுக்கு அருகில் இருக்கும் தெற்கு பகுதியின் முழுக் கட்டுப்பாட்டையும் ராணுவம் மீண்டும் கைப்பற்றிவிட்டது. என்றாலும் சில இடங்களில் சண்டை தொடர்கிறது’ என்று இஸ்ரேலிய ராணுவ படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹக்கரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x